பெலாருஷ்யாவில் ஒப்புரவு அருளடையாளம் பெறும் விசுவாசிகள் பெலாருஷ்யாவில் ஒப்புரவு அருளடையாளம் பெறும் விசுவாசிகள் 

கத்தோலிக்கர் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற ஊக்குவிப்பு

கத்தோலிக்கர் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறச் செல்ல வேண்டும். நம் பிறரன்பைப் பெறுவதற்காகக் காத்திருக்கும், மறைந்த நம் சகோதரர், சகோதரிகளுக்காகச் செபிக்க வேண்டும் - கர்தினால் பியாச்சென்சா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனிதர் அனைவரின் பெருவிழா, இறந்த அனைவரின் நினைவு நாள் ஆகிய நாள்களில் கத்தோலிக்கர் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற வேண்டும், இறந்தோருக்காகச் செபிக்க வேண்டும் என்று, திருஅவையின் மனசாட்சி நீதிமன்றத் தலைவர் கர்தினால் மவ்ரி பியாச்சென்சா (Mauri Piacenza) அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிறிஸ்தவர்களின் இவ்விரு முக்கிய நாள்களை முன்னிட்டு வெளியிட்டுள்ள (அக்டோபர் 29) மடலில், இப்புனித நாள்களில் கத்தோலிக்கர் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறச் செல்லுமாறும், இவ்வுலகை விட்டு மறைந்திருந்தாலும், நம் பிறரன்பைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் நம் சகோதரர், சகோதரிகளுக்காகவும் செபிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார், கர்தினால் பியாச்சென்சா.

கத்தோலிக்கர், இப்புனித நாள்களில் இவற்றைக் கடைப்பிடித்து, திருஅவை தம் பிள்ளைகளுக்கு மிகத் தாராளமாக வழங்கும் பரிபூரண பலனை, பக்தியோடும், தாழ்ச்சியோடும், மகிழ்வோடும் பெறுமாறும் கூறியுள்ளார், கர்தினால் பியாச்சென்சா.

இறந்த அனைவரின் நினைவு நாளன்று, பரிபூரண பலனைப்பெற, விசுவாசிகள், ஆலயத்திற்குச் சென்று, இறைத்தந்தையை நோக்கி இயேசு கற்றுக்கொடுத்த செபத்தையும், விசுவாச அறிக்கையையும் செபிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கத்தோலிக்கர், நவம்பர் மாதத்தின் முதல் எட்டு நாள்களில், கல்லறைகளைச் சந்தித்து, இறந்தோருக்காக இறைவேண்டல் செய்தால், பரிபூரண பலனைப் பெற்று, இறைவனின் பேரொளியைக் காண்பதற்காகக் காத்திருக்கும் இறந்தோருக்கு உதவ முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2019, 14:59