தேடுதல்

Vatican News
இஸ்ரேல்-சிரியா எல்லையில் போர் இஸ்ரேல்-சிரியா எல்லையில் போர்  (AFP or licensors)

ஆயுத மோதல்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்து

ஆயுதங்களை உருவாக்குவதற்கு, இயற்கையின் வளங்கள் அழிக்கப்படுவதோடு, அந்த ஆயுதங்களின் பயன்பாட்டால், ஒட்டுமொத்த இயற்கையும் அழியும் நிலையை அடைந்துள்ளது, ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் அநீதி - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆயுதம் தாங்கிய மோதல்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து நம்மையேக் காப்பது குறித்த ஒப்பந்தம், பன்னாட்டளவில் உருவாகியிருப்பதை திருப்பீடம் பாராட்டுகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. அவையில் கூறினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், நவம்பர் 6 இப்புதனன்று நடைபெற்ற 74வது அமர்வில் இவ்வாறு கூறினார்.

ஆயுதங்களை உருவாக்குவதற்கு, இயற்கையின் வளங்கள் அழிக்கப்படுவதோடு, அந்த ஆயுதங்களின் பயன்பாட்டால், ஒட்டுமொத்த இயற்கையும் அழியும் நிலையை அடைந்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் அநீதி என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

அத்துடன், ஒரு நாட்டின் தூதர்கள், நடு நிலை மாறி, குற்றங்களில் ஈடுபடும் வேளையில், அவர்களை தடுத்து நிறுத்தவும், தண்டிக்கவும் தேவையான அதிகாரத்தை பன்னாட்டு அமைப்புக்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை, மற்றோர் அமர்வில் முன்வைத்தார், பேராயர் அவுசா.

மேலும், கடல் மட்டம் உயர்ந்துவருவதைக் கண்காணிக்கவும், அவற்றிற்கு உகந்த நடவடிக்கை எடுக்கவும் பன்னாட்டு சட்ட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பேராயர் அவுசா அவர்கள் ஐ.நா. அவையின் மற்றோர் அமர்வில் வெளியிட்டார்.

07 November 2019, 15:11