தேடுதல்

Vatican News
அருள்பணி Fernando Chica Arellano அருள்பணி Fernando Chica Arellano  

"நன்னெறி நிறைந்த தலைமைத்துவத்துடன்..."

நன்னெறி விழுமியங்களில் நம்பிக்கை கொண்டுள்ள தலைவர்கள், அரசியல், மதம், அறிவியல், கலாச்சாரம், பொருளாதாரம் என்ற அனைத்துத் துறைகளிலும் தேவைப்படுகின்றனர் - அருள்பணி Arellano

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் வாழும் இன்றைய உலகில், தந்திரமான போக்கும், சுயநலமும் அடிக்கடி வெற்றிகொள்வதைப் போல் தெரிகிறது என்றாலும், இவற்றை வென்று, உண்மையையும், பிறர் நலத்தையும் நிலைநாட்டுவது, அனைத்து மனிதரின் கடமை என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கில் கூறினார்.

உரோம் நகரில் அமைந்துள்ள உணவு மற்றும் வேளாண் நிறுவனமான FAO மையத்தில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள ஜோசப் இராட்ஸிங்கர் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டு கருத்தரங்கில், FAO கூட்டங்களில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பயங்கேற்றுவரும் அருள்பணி Fernando Chica Arellano அவர்கள் இவ்வாறு கூறினார்.

சுயநலம், உடனடித் தேவைகளை நிறைவு செய்தல் என்ற விழுமியங்கள், மனிதர்களை வழிநடத்தும்போது, அங்கு, மனிதர்களுக்கும், பூமிக்கோளத்திற்கும் எதிராக வன்முறைகள் உருவாகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவா உமக்கேப் புகழ் என்ற திருமடலில் கூறியிருந்த கருத்தை, அருள்பணி Arellano அவர்கள் தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

நன்னெறி விழுமியங்கள் செல்லரித்துப் போகும்படி, பன்னாட்டளவில் நடைபெறும் பல்வேறு முயற்சிகள், நன்னெறி ஏதுமற்ற சுயநலத்தை முன்னிறுத்தும் ஆபத்தை வளர்த்துள்ள நிலையில், நன்னெறியை வலியுறுத்தும் தலைமைத்துவம் பெரிதும் தேவைப்படுகிறது என்று அருள்பணி Arellano அவர்கள் எடுத்துரைத்தார்.

நன்னெறி விழுமியங்களில் நம்பிக்கை கொண்டுள்ள தலைவர்கள், அரசியல், மதம், அறிவியல், கலாச்சாரம், பொருளாதாரம் என்ற அனைத்துத் துறைகளிலும் தேவைப்படுகின்றனர் என்பதை, அருள்பணி Arellano அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

"நன்னெறி நிறைந்த தலைமைத்துவப் பண்புகளுடன் நிகழ்காலத்தைக் கட்டியெழுப்புதலும், எதிர்காலத்திற்காக தயாரித்தலும்" என்ற மையக்கருத்துடன் நிகழ்ந்த இந்த பன்னாட்டு கருத்தரங்கை, இராட்ஸிங்கர் அறக்கட்டளையின் தலைவர், அருள்பணி ­ஃபெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

13 November 2019, 15:07