தேடுதல்

Vatican News
பன்னாட்டு கூட்டம் ஒன்றில் உரையாற்றும் கர்தினால் பீட்டர் டர்க்சன் - கோப்புப் படம் பன்னாட்டு கூட்டம் ஒன்றில் உரையாற்றும் கர்தினால் பீட்டர் டர்க்சன் - கோப்புப் படம் 

பன்னாட்டு கடல்சார் நிறுவனத்தின் கூட்டத்தில் கர்தினால் டர்க்சன்

கடல்வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற கருத்துக்களை இளையத் தலைமுறையினர் சிறு வயது முதல் கற்றுக்கொள்வதற்கு உதவும் வகையில், இக்கருத்துக்கள் அவர்களது பாடத்திட்டங்களில் இடம்பெறுவது அவசியம் - கர்தினால் பீட்டர் டர்க்சன்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை மனதில் கொண்டு, பெருங்கடல்களையும், கடல் வளங்களையும், பயன்படுத்தும் முயற்சிகளில், பன்னாட்டு கடல்சார் நிறுவனம் ஈடுபட்டிருப்பது கண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பாராட்டுக்களைக் கூறியுள்ளார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நவம்பர் 27, இப்புதனன்று, பன்னாட்டு கடல்சார் நிறுவனம், இலண்டன் மாநகரில் ஏற்பாடு செய்திருந்த 31வது  பன்னாட்டு கூட்டத்தில், ஒருங்கிணைக்கப்பட்ட மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்று வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

நமது பெருங்கடல்கள், நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை வழங்குவதோடு, காற்றை சுத்தம் செய்வது, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது, கார்பன் சுழற்சியில் பெரும் பங்காற்றுவது என்று பல வழிகளில் நமக்கு உதவியாக உள்ளன என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

சுற்றுச்சூழலைக் காப்பது, மனிதர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நன்னெறி கடமை என்பதை, தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட கர்தினால் டர்க்சன் அவர்கள், படைப்பு அனைத்தும் நமது கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனவே தவிர நம் அதிகாரத்திற்கு உட்பட்டவை அல்ல என்பதை தெளிவுபடுத்தினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனிதகுல பாதுகாப்புடன் பிரிக்கமுடியாத பிணைப்பு கொண்டது என்று திருத்தந்தை வலியுறுத்தி வருகிறார் என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் டர்க்சன் அவர்கள், கடல்வளங்களைப் பாதுகாப்பது, நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள பெரும் சவால் என்பதை எடுத்துரைத்தார்.

கடல்வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற கருத்துக்களை இளையத் தலைமுறையினர் சிறு வயது முதல் கற்றுக்கொள்வதற்கு உதவும் வகையில், இக்கருத்துக்கள் அவர்களது பாடத்திட்டங்களில் இடம்பெறுவது அவசியம் என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.

தூக்கியெறியும் கலாச்சாரத்தால் சூழப்பட்டுள்ள இளைய தலைமுறையினர், இவ்வுலகையும், படைப்புக்கள் அனைத்தையும் மதிப்புடன் நடத்தவும், குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை அறவே நீக்கவும், அவர்களுக்குச் சொல்லித்தருவது, மிகவும் அவசியம் என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள் எடுத்துரைத்தார்.

28 November 2019, 15:03