தேடுதல்

பேராயர் இவான் யுர்கோவிச் பேராயர் இவான் யுர்கோவிச் 

நாடுகளின் கடன் பிரச்சனையால் சமுதாயத் திட்டங்கள் பாதிப்பு

பொருளாதார நிலையான தன்மையைக் கொண்டிராமல் தடுமாறும் நாடுகளுக்கு ஆதரவும், ஒருமைப்பாடும் வழங்க வேண்டியது உலக நாடுகளின் கடமை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

ஒவ்வொரு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டைவிட அதிக அளவில் கடனைக் கொண்டிருக்கும் நாடுகள், வளர்சசித் திட்டங்களில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து ஐ.நா. கூட்டமொன்றில் உரையாற்றினார், திருப்பீட பிரதிநிதி பேராயர் இவான் யுர்கோவிச்.

நாடுகளின் கடன் பிரச்சனை குறித்து, UNCTAD எனப்படும் ஐ.நா.வின், வர்த்தகம் மற்றும் வளர்ச்சி குறித்த அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றிய, ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் யுர்கோவிச் அவர்கள், நாடுகளின் பெரும் கடன் பிரச்சனைகளால், ஓய்வூதியத் திட்டம், ஏழைகளுக்குரிய நிதியுதவிகள் போன்ற பல்வேறு சமுதாயத் திட்டங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன என கூறினார்.

நாட்டின் பொருளாதார மற்றும் நிதி அமைப்பு முறையில் பல்வேறு தாக்கங்களைக் கொண்டிருக்கும் இக்கடன் பிரச்சனைக்கு தீர்வு காண, பல்வேறு பரிந்துரைகளையும் திருப்பீடத்தின் சார்பில், இக்கூட்டத்தில் முன்வைத்தார் பேராயர் யுர்கோவிச்.

அமைப்புமுறை சீர்திருத்தங்கள் வழியாக, செலவீனங்களைக் கட்டுப்படுத்தல்,  கவனமுடன் கூடிய முதலீடுகள் ஆகியவை அவசியம் என்பதை சுட்டிக்காட்டிய பேராயர், அனைத்துலக அளவில் ஏழை நாடுகளின் கடன் சுமையைக் குறைப்பது குறித்து முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

பொருளாதார நிலையான தன்மையைக் கொண்டிராமல் தடுமாறும் நாடுகளுக்கு ஆதரவும், ஒருமைப்பாடும் வழங்க வேண்டியது உலக நாடுகளின் தார்மீகக் கடமையாகிறது என்பதையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார், திருப்பீட பிரதிநிதி பேராயர் யுர்கோவிச்.

நீதி, உண்மை, நியாயம், ஒருமைப்பாடு ஆகியவைகளின் துணையுடன் உறுதியான அறநெறிக் கொள்கைகளைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட உலக நிதி அமைப்பு முறையின் அவசியத்தையும் வலியுறுத்திய பேராயர் யுர்கோவிச் அவர்கள், அனைவரின் ஒத்துழைப்பும் இதில் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2019, 15:07