தேடுதல்

Vatican News
ஜெர்மனியில் புலம்பெயர்ந்தவர்களுக்கு கல்வி ஜெர்மனியில் புலம்பெயர்ந்தவர்களுக்கு கல்வி  (AFP or licensors)

புலம்பெயர்ந்த இளையோருக்கு கல்வி வாய்ப்பு அவசியம்

உலகின் 25 கோடியே 80 இலட்சம் புலம்பெயர்ந்தோரில், ஏறத்தாழ 11 விழுக்காட்டினர் 24 வயதுக்குட்பட்டவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மக்களின் புலம்பெயர்வு பற்றிய கருத்துப்பரிமாற்றங்கள், புலம்பெயர்ந்தோர் பற்றியது மட்டுமல்ல, நம் அனைவர் பற்றியதும், இப்போதைய மற்றும், வருங்கால மனிதக் குடும்பம் பற்றியதுமாகும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கூட்டம் ஒன்றில் கூறினார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும், ஏனைய பன்னாட்டு நிறுவனங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், நவம்பர் 28, இவ்வியாழனன்று, ஜெனீவாவில், புலம்பெயர்ந்தோர் பற்றி நடைபெற்ற புலம்பெயர்ந்தோர் உலக நிறுவனத்தின் 109வது அமர்வில் உரையாற்றியபோது, இவ்வாறு கூறினார்.

தனிமனிதப் போக்கும், புறக்கணிப்பும் உலக அளவில் அதிகரித்துவரும்வேளை, ஏழைகள் மற்றும், நலிந்தோர் உட்பட, சமுதாயத்தில் எவரும் ஒதுக்கப்படக் கூடாது என்ற திருப்பீடத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்திய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், புலம்பெயர்ந்தோரால் ஏற்படும் நன்மைகளைச் சுட்டிக்காட்டினார்.

மனித உறவுகள் பேணப்படவும், ஒத்துழைப்பின் புதிய பிணைப்புகள் உருவாக்கப்படவும், அறிவும், கலாச்சாரமும் பரிமாறப்படுவதற்கும், பொருளாதாரம் வளம் பெறவும், மக்கள்தொகை குறைவால் ஏற்படும் தொழிலாளர் பிரச்சனை தீர்க்கப்படவும், புலம்பெயர்ந்தோர் உதவுகின்றனர் என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கூறினார்.

புலம்பெயர்ந்தோரை ஏற்கும் நாடுகள், அவர்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கி, அடிப்படை மனித உரிமைகளையும், மாண்பையும் மதித்து, அவர்களைத் தங்களோடு ஒன்றிணைக்கும்போது, அந்நாடு மேலும் வளமடையும் என்று கூறிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், புலம்பெயர்ந்தோர் குறித்த உலகளாவிய ஒப்பந்தம் மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.

புலம்பெயர்ந்தோர் குறித்த உலகளாவிய உரையாடல் அமைப்பு, 2019ம் ஆண்டை இளையோர்க்கு அர்ப்பணித்துள்ளவேளை, புலம்பெயர்ந்த இளையோரை மேம்படுத்த, அவர்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்கப்படல் அவசியம் என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கூறினார்.

உலக புலம்பெயர்ந்தோர் நிறுவனத்தின் (IOM) ஒரு கிளையாக, புலம்பெயர்ந்தோர் குறித்த உலகளாவிய உரையாடல் அமைப்பு (IDM) செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு 2001ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.  

29 November 2019, 15:01