பேராயர் பெர்னார்தித்தோ அவுசா பேராயர் பெர்னார்தித்தோ அவுசா 

பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தோர்க்கு நியாயமான தீர்வு கிடைக்க

ஐ.நா. நிறுவனத்தின் நிவாரணப் பணியாற்றும் அமைப்பு, தற்போது 58 முகாம்களில், ஏறத்தாழ 54 இலட்சம் பாலஸ்தீனியர்களுக்கு உதவி வருகின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீனிய மக்கள், பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், அமைதியிலும், பாதுகாப்பிலும் அருகருகில் வாழ்வதற்கென, இரு நாடுகள் தீர்வை விரைவில் கொண்டுவரும் நோக்கத்தில், அதற்குப் பொறுப்பான நாடுகள் கலந்துரையாடலை மீண்டும் துவக்க வேண்டுமென்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறியுள்ளார்.

இதன் வழியாக, புலம்பெயர்ந்த பாலஸ்தீனிய மக்களுக்கு, நியாயமான மற்றும், நிலைத்த தீர்வுகள் விரைவில் எட்டப்படும் என திருப்பீடம் நம்புகின்றது என்று, ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகக் கலந்துகொள்ளும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் தெரிவித்தார்.

நவம்பர் 11, இத்திங்களன்று, ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற, ஐ.நா. நிறுவனத்தின் நிவாரணப் பணியாற்றும் அமைப்பு (UNRWA) பற்றிய கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், இந்த அமைப்பு எதிர்கொள்ளும் இரு முக்கிய சவால்களையும் சுட்டிக்காட்டினார்.

நீண்ட காலம் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, குறிப்பாக, சிரியாவில் 2014ம் ஆண்டிலிருந்து வீடின்றி துன்புறும் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும், மிக நலிந்த மக்களுக்கு ஆற்றப்படும் மனிதாபிமான உதவிகளுக்கு, இவ்வாண்டு நிதியுதவி குறைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார், பேராயர் அவுசா.

1948ம் ஆண்டின் பாலஸ்தீனிய தலைமுறைகள் வாழ்கின்ற நாடுகளில், இன்னும் அவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்களாக நடத்தப்படுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் அவுசா அவர்கள், இந்நிலை, பாலஸ்தீனியப் பகுதிகளில் பதட்டநிலைகள் அதிகரிக்கும்போது, அம்மக்களுக்கு உதவும் நாடுகளுக்கு பெரும் சுமையாக உள்ளது என்றும் கூறினார்.

1948ம் ஆண்டு போர், 1967ம் ஆண்டில் நடைபெற்ற ஆறு நாள்கள் போர் ஆகியவற்றால் புலம்பெயர்ந்த பாலஸ்தீனிய மக்களுக்கு உதவுவதற்கென, ஐ.நா. நிறுவனத்தின் நிவாரணப் பணியாற்றும் அமைப்பு உருவாக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவு விரைவில் இடம்பெறவுள்ளதைக் குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், தற்போது, இந்த அமைப்பு, 58 முகாம்களில், ஏறத்தாழ 54 இலட்சம் பாலஸ்தீனியர்களுக்கு உதவி வருகின்றதைப் பாராட்டினார்.

இந்த மக்களுக்கென, இந்த கல்வியாண்டில் 709 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதைப் பாராட்டிப் பேசிய பேராயர் அவுசா அவர்கள், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டியுள்ளதையும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2019, 14:51