தேடுதல்

Vatican News
பேராயர் இவான் யுர்க்கோவிச் பேராயர் இவான் யுர்க்கோவிச் 

போரைச் சித்தரிக்கும் வீடியோ விளையாட்டுகளை தடைசெய்ய...

மதத் தலைவர்கள், மதத்தின் பெயரால் வெறுப்பும் வன்முறையும் பரவுவதைத் தடுக்கவேண்டிய கடமையை நிறைவேற்றுவதற்கு, அவர்களுக்கு சமய சுதந்திரம் வழங்கப்பட வேண்டியது மிக முக்கியம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மனித முன்னேற்றத்தின் உண்மையான ஒரே வழி அமைதி, இதனை ஒருமுறை அடைந்துவிட்டாலும், அதற்கென தொடர்ந்து அர்ப்பணிக்க வேண்டிய சவாலாகவே அது உள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் ஐ.நா. மற்றும், ஏனைய பன்னாட்டு அமைப்புகளில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், “போர்களை முடிவுறச் செய்வதில் மதங்களின் பங்கு” என்ற தலைப்பில், நவம்பர் 7, இவ்வியாழனன்று உரையாற்றியவேளை இவ்வாறு கூறினார்.

அமைதி வாரத்தை முன்னிட்டு, மால்ட்டா பக்த அமைப்பு நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், மதங்கள் ஒன்றிணைந்து நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு திருத்தூதுப் பயணங்களில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, மதங்கள் மத்தியில் இடம்பெறும் உரையாடல்கள், பொதுமக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப உதவும் என்று கூறினார்.

கல்வியின் முக்கியத்துவம்

அமைதியைக் கட்டியெழுப்பும் அனைத்து முயற்சிகளிலும் கல்வி மைய இடத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில், உரோம் இலாத்தரன் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் அமைதி குறித்த பாடத்தையும் திருத்தந்தை அண்மையில் இணைத்துள்ளார் என்று பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கூறினார்.

இன்று உலகில் பல இடங்களில் போர்கள் நடந்தாலும், பரவலாக, குறிப்பாக, மேற்குலகில் அவை பற்றிய அக்கறையின்றி வளர்ந்து வருகிறோம் என்றும், போர் என்ற அச்ச உணர்வை இழந்துவிட்டதுபோல் தெரிகின்றது என்றும் கூறிய, பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், பல சிறார், வன்முறைமிக்க போர் சார்ந்த வீடியோ விளையாட்டுக்கள் விளையாடுவது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.

கொலைகள் மற்றும் அழிவுகள் இடம்பெறும் இந்த விளையாட்டு, ஒரு பொழுதுபோக்காக உள்ளது என்றும், விளையாடுபவர் எவ்வளவுக்குக் கொலை செய்கிறாரோ, அழிக்கிறாரோ அவ்வளவுக்கு அவர் வெற்றிபெற்றவராய் இருக்கின்றார் என்றும் கூறிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், இத்தகைய விளையாட்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை மற்றும், இவற்றைத் தவிர்ப்பதில் மதங்கள் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் கூறினார்.

இந்த வீடியோ விளையாட்டு விதிமுறைகளில், பன்னாட்டு மனிதாபிமான சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கு, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம், அந்த விளையாட்டுக்களைத் தயாரிப்பவர்களுடன் இணைந்து செயலாற்றத் துவங்கியிருப்பது பாராட்டுக்குரியது என்று, பேராயர் தெரிவித்தார்.

மதத்தின் பெயரால் வெறுப்பும் வன்முறையும் பரவுவதை, குறிப்பாக நாடுகளுக்கு இடையேயும், சமுதாய ஊடகங்களிலும் பரவுவதைத் தடுப்பதற்கு, மதத் தலைவர்களின் பொறுப்பை வலியுறுத்தும் அதேநேரம், மதத் தலைவர்கள், இக்கடமையை நிறைவேற்றுவதற்கு, அவர்களுக்கு சமய சுதந்திரம் வழங்கப்பட வேண்டியது மிக முக்கியம் என்பதையும் பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

08 November 2019, 15:06