தேடுதல்

ஐ.நா. பொது அவையில் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா ஐ.நா. பொது அவையில் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா  

மனித சமுதாயத்திற்கெதிரான குற்றங்கள் கண்டிக்கப்பட வேண்டும்

மனித சமுதாயத்திற்கெதிரான குற்றங்களை எதிர்கொள்வோர், உலக அளவில் தங்களின் குரல்கள் கேட்கப்படவும், அவர்களுக்கு நீதி கிடைக்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள்,  ஐ.நா. பொது அவையின் 74வது அமர்வில், உலகளாவிய சட்டக் குழுவின் அறிக்கை பற்றி அக்டோபர் 31, இவ்வியாழனன்று நடைபெற்ற கருத்துப்பரிமாற்றத்தில், திருப்பீடத்தின் சார்பில் தன் எண்ணங்களை வெளியிட்டார்.

மனித சமுதாயத்திற்கெதிரான குற்றங்கள் கண்டிக்கப்பட வேண்டும், மற்றும், இத்தகைய குற்றங்கள், வரலாற்றின் பக்கங்களிலிருந்து அகற்றப்பட, எல்லா நிலைகளிலும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள் கேட்டுக்கொண்டார்.

அரசியல், சமய மற்றும், இன வன்முறைகளால் உலகம் தொடர்ந்து புண்பட்டு வருகிறது, அடித்தல், கொலைசெய்யப்படுதல், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாதல், நாடுகடத்தப்படல், நவீன அடிமைமுறைகளுக்கு விற்கப்படல் போன்ற அச்சம் தொடர்ந்து நிலவி வருகிறது என்பதை, இந்த கருத்துப்பரிமாற்றத்தில் மீண்டும் சுட்டிக்காட்டினார், பேராயர் அவுசா.

உலகளாவிய சட்டக் குழுவின் அறிக்கை எண் ஐந்தில், மனித சமுதாயத்திற்கெதிரான குற்றங்களால் பாதிக்கப்படுவோர் மீண்டும், தாங்கள் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பப்படக் கூடாது, அடக்குமுறைக்குப் பயந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் வரவேற்கப்பட்டு, பாதுகாப்பும் உதவியும் அளிக்கப்பட வேண்டும் என்பது இடம்பெற்றுள்ளது வரவேற்கப்பட வேண்டியது என்று கூறினார், பேராயர் அவுசா.

இந்த அறிக்கையை மையப்படுத்தி, ஒரு புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட முயற்சிகள் இடம்பெறும் இவ்வேளையில், இந்தப் புதிய ஒப்பந்தத்தில், மனித சமுதாயத்திற்கெதிரான குற்றங்களை எதிர்கொள்வோர், உலக அளவில் தங்களின் குரல்கள் கேட்கப்படவும், அவர்களுக்கு நீதி கிடைக்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார், பேராயர் அவுசா.

பலவீனமான பாதுகாப்பு மற்றும் நீதித்துறை அமைப்புகளைக் கொண்டுள்ள, இன, சாதி அல்லது சமய சிறுபான்மையினர் வாழும் நாடுகளுக்கு உதவிகள் வழங்கப்படுவது,  இந்தப் புதிய ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டுமென்றும், பேராயர் அவுசா அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2019, 14:53