தேடுதல்

பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் Jessica Meir, Christina Koch பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் Jessica Meir, Christina Koch 

விண்வெளிக்கும் சாலை விதிமுறைகள் அவசியம்

விண்வெளியில், அதிகமாக அனுப்பப்பட்டுவரும் சிறிய செயற்கைக்கோள்கள், ஒன்றோடொன்று மோதுவதற்கு வாய்ப்புள்ளதால், அவை, விண்வெளியில் சாலைவிதிகள் உருவாக்கப்படுவதற்கு வழியமைத்துள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தொலைத்தொடர்புக்காக கருவிகள் அமைத்தல், சுற்றுச்சூழல் கட்டுப்பாடு, செயற்கைக்கோள்களை இயக்குதல் போன்றவற்றிற்காக, பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை, திருப்பீடம் ஊக்குவிப்பதாக, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. பொது அவையில் கூறினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள்,  ஐ.நா. பொது அவையின் 74வது அமர்வில், ‘விண்வெளியை அமைதியான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துதல்’ என்ற தலைப்பில், நவம்பர் 01, இவ்வெள்ளியன்று நடைபெற்ற கருத்துப்பரிமாற்றத்தில் இவ்வாறு கூறினார்.

விண்வெளியில், அதிகமாக அனுப்பப்பட்டுவரும் சிறிய செயற்கைக்கோள்கள், ஒன்றோடொன்று மோதுவதற்கு வாய்ப்புள்ளதால், அவை, விண்வெளியில் சாலைவிதிகள் உருவாக்கப்படுவதற்கு வழியமைத்துள்ளன என்று கூறிய பேராயர் அவுசா அவர்கள்,  விண்வெளியில் கோள்கள் மோதுவதால் உருவாகும் குப்பைகள் அகற்றப்பட வேண்டியது மிகவும் முக்கியம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

விண்வெளி பரந்து விரிந்திருந்தாலும், கோள்களின் குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதை குறைவாகவே உள்ளது என்றும், இப்பூமியில் நிலவும் விதிமுறைகள் போன்று, விண்வெளிக்கும் சாலை விதிமுறைகள் அமைக்கப்பட, உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என்றும், பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

அடுத்த பத்து ஆண்டுகளில் சிறிய செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறிய பேராயர் அவுசா அவர்கள், செயற்கைக்கோள்கள், புயல்கள் உருவாவது, காலநிலை மாற்றம் போன்ற அறிவிப்புக்களுக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் உதவுகின்றன என்பதையும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2019, 14:40