அமேசான் மாமன்றம் - செய்தியாளர் சந்திப்பு அமேசான் மாமன்றம் - செய்தியாளர் சந்திப்பு 

அமேசான் உருக்குலைவுக்கெதிராய் திருஅவை குரல் கொடுக்க..

அமேசானின் அழிவு, அதன் வளத்தையும், அழகையும் பாதுகாக்காத, பலவீனமான சூழலியல் சட்டத்தோடும் தொடர்புடையது – 3வது பொது அமர்வில் ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

அமேசான் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் மூன்றாவது பொது அமர்வு, அக்டோபர் 08, இச்செவ்வாய் காலை 9 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில் துவங்கியது.

183 மாமன்றத்தந்தையர் பங்கெடுத்த இந்த அமர்வில், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், பூர்வீக இனத் தலைவர்கள், குழுமங்கள், மற்றும் சமுதாய இயக்கங்கள் தண்டிக்கப்படும் அவலம் ஆகிய தலைப்புகள் பற்றி மாமன்றத் தந்தையர் பகிர்ந்து கொண்டனர்.

அமேசான் மறைசாட்சிகள்

உண்மையில், அமேசானில் இடம்பெறும் மறைசாட்சிகளின் எண்ணிக்கை அச்சமூட்டுவதாய் உள்ளது, 2003ம் ஆண்டுக்கும், 2017ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தங்களின் பூர்வீக நிலங்களைப் பாதுகாப்பதற்காகப் போராடிய பூர்வீக இன மக்கள் 1,119 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அரசுகள் போதுமான பாதுகாப்பு அளிக்காததால், சமூகநலத் தலைவர்கள் அடிக்கடி தண்டிக்கப்படுகிறார்கள் என்று தந்தையர் தெரிவித்தனர்.

சுற்றுச்சூழலை அழிக்கும் திட்டங்களுக்கு எதிராய்க் குரல் கொடுப்பதோடு, ஒருமைப்பாடு மற்றும், சமுதாய நீதியை ஊக்குவிக்கும் நிரந்த செயல்திட்ட குழு, மறைமாவட்ட அளவில் உருவாக்கப்பட்டு, தங்கள் நிலங்களைப் பாதுகாப்பதற்குப் போராடுகிறவர்களுக்கு திருஅவை அரணாகச் செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

சட்டவிரோத செயல்களுக்கு எதிராய்..

அமேசான் பகுதியில் கனிமச் சுரங்கங்களின் கழிவுகளால் ஆறுகள் மாசடைதல், மரத்தொழிற்சாலைக்கும், 'கொக்கோ' பயிர்த்தொழிலுக்கும் மரங்கள் வெட்டப்படுதல் போன்றவை அமேசானின் சூழலியலுக்கு அச்சுறுத்தலாக உள்ளது எனப் பேசப்படுவதோடு, அப்பகுதியில் இடம்பெறும், சுரங்கத்தொழில் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராய் திருஅவை கண்டனம் தெரிவிக்க வேண்டும், மனித, சமுதாய மற்றும், சூழலியல் சார்ந்த உலகளாவிய விதிமுறைகளுக்குத் திருஅவை ஆதரவு வழங்க வேண்டுமென்றும், மாமன்றத் தந்தையர் விண்ணப்பித்தனர். 

அமேசான், புலம்பெயர்வு நிலம்

அமேசானின் பூர்வீக இன மக்கள் நகரங்களில் குடியேறுதல், வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்வோர் அமேசான் வழியாகச் செல்லுதல், அமேசானில் வேலைவாய்ப்பின்மை, மனித வர்த்தக வன்முறை, போதைப்பொருள் வியாபாரம், பாலியல் தொழில், சுரண்டல் போன்ற பிரச்சனைகளால் அச்சுறுத்தப்பட்டு, அமேசான் இளையோர் அங்கிருந்து இடம்பெயர்தல் போன்ற விவகாரங்களால் அப்பகுதியில் மேய்ப்புப்பணியில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் மாமன்றத் தந்தையர் விண்ணப்பித்தனர்.

பெண்களைத் தியாக்கோன்களாக...

அமேசானில் நற்செய்திப் பணியாற்ற மேய்ப்பர்களும், அர்ப்பணிக்கப்பட்ட பெண் துறவு சபைகளும் அதிகம் தேவைப்படுவதால், பூர்வீக இனத்தவர் மத்தியில் இறையழைத்தல் ஊக்குவிக்கப்பட வேண்டும், பெண்களைத் தியாக்கோன்களாகத் திருநிலைப்படுத்தும் வாய்ப்புகள் பற்றி சிந்திக்க வேண்டுமென்றும் மாமன்றத் தந்தையர் அழைப்பு விடுத்தனர்.

மேலும், அக்டோபர் 08, இச்செவ்வாய் மாலை நான்கு மணிக்குத் துவங்கிய நான்காவது பொது அமர்விலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்குகொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2019, 16:27