மாமன்றத்தின் 12வது பொது அமர்வின் ஆரம்ப செபம் மாமன்றத்தின் 12வது பொது அமர்வின் ஆரம்ப செபம் 

அமேசான் ஆயர்கள் மாமன்றத்தின் 12வது பொது அமர்வு

அமேசான் பகுதியில் வாழும் வறியோருடன் தன்னையே அடையாளப்படுத்திக்கொள்ளாமல், தலத்திருஅவை, அப்பகுதியில் பணியாற்ற முடியாது என்ற கருத்து இந்தப் பொது அமர்வில் வலியுறுத்தப்பட்டது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமேசான் பகுதியை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்றுவரும் உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் 12வது பொது அமர்வு, திருத்தந்தை பிரான்சிஸ், மற்றும் 173 மாமன்றத் தந்தையரின் பங்கேற்போடு, இச்செவ்வாய் பிற்பகல் நடைபெற்றது.

அமேசான் பகுதியில் வாழும் வறியோருடன் தன்னையே அடையாளப்படுத்திக்கொள்ளாமல், தலத்திருஅவை, அப்பகுதியில் பணியாற்ற முடியாது என்ற கருத்து இந்தப் பொது அமர்வில் வலியுறுத்தப்பட்டது.

மரணத்துடன் வாழ்வதைவிட, வாழ்வை உறுதி செய்யும் போரட்டத்தில் மரணமடைவது மேல் என்றும், மண்ணின் மைந்தர்களுடன் இணையும் திருஅவை, நல்ல சமாரியரின் முகத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்றும், வலிமையான கருத்துப் பரிமாற்றங்கள் இந்தப் பொது அமர்வில் இடம்பெற்றன.

அநீதிகளுக்கு உள்ளாக்கப்படும் அமேசான் பகுதி மக்கள், தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொறுப்பை உணரவும், தங்கள் உரிமைகளைப் போராடிப் பெறுவதற்கு ஆற்றல் பெறவும், அவர்களுக்கு உதவிகள் வழங்குவது, திருஅவையின் கடமை என்ற கருத்து, இவ்வமர்வில் வெளியானது.

படைப்பின் பாதுகாப்பில் அறிவியலின் பங்கு, சுற்றுச்சூழல் குறித்து இன்னும் ஆழமான மனமாற்றம், அமேசான் பகுதிக்கென உரிய ஆன்மீகம், மற்றும் இறையியல் ஆகியவை குறித்த தேடல், பொதுநிலையினரை உள்ளடக்கிய அருள்பணிகள் போன்ற கருத்துக்களும் இவ்வமர்வில் விவாதிக்கப்பட்டன.

அருள்பணியாளர்கள் இல்லாத காரணத்தால், அமேசான் பகுதியில் வாழும் 70 விழுக்காட்டு மக்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே திருப்பலியில் கலந்துகொள்ளும் நிலை உள்ளது என்பதால், மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளுக்கு திருஅவை ஆற்றவேண்டிய கடமை என்ன என்ற கேள்வி இந்த அமர்வில் ஆழமாக விவாதிக்கப்பட்டது.

இந்த பொது அமர்வின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். இதைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரைத் தாங்கிய கப்பல் ஒன்று, அமேசான் பகுதியில் மருத்துவப் பணிகளில் ஈடுபட்டு வருவதைக் காட்டும் காணொளி ஒன்று திரையிடப்பட்டது.

12வது பொது அமர்வைத் தொடர்ந்து, இப்புதனன்று, மாமன்றத் தந்தையர் மீண்டும் ஒருமுறை மொழிவாரியான குழுக்களில் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்வர் என்றும், 13வது பொது அமர்வு, வியாழன் பிற்பகலில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2019, 15:21