தேடுதல்

Vatican News
அமேசான் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம் 151019 அமேசான் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம் 151019  (Vatican Media)

அமேசான் பகுதிக்கு நிரந்தர ஆயர் அமைப்பு அவசியம்

அமேசான் பகுதியில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும், ஒரு நிரந்தர கண்காணிப்பு குழு தேவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

"அமேசான்: திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சூழலியலுக்கும் புதிய பாதைகள்" என்ற தலைப்பில் வத்திக்கானில் நடைபெற்றுவரும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் 11வது பொது அமர்வு, அக்டோபர் 15, இப்புதன் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில் துவங்கியது.

180 மாமன்றத் தந்தையர் பங்குகொண்ட இந்த அமர்வில் உரையாற்றிய பிரதிநிதிகள், அமேசான் பகுதியில் கூட்டுப்பண்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், Repam எனப்படும், அமேசான் திருஅவை வலையமைப்பின் ஒத்துழைப்புடன், அப்பகுதிக்கு, நிரந்தர ஆயர்கள் அமைப்பு ஒன்று உருவாக்கப்படுமாறு பரிந்துரைத்தனர்.   

இந்த அமைப்பு, இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவையோடு ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும், நிலம் சுரண்டப்படுதல், போதைப்பொருள் வர்த்தகம், மனித வர்த்தகம், பாலியல் தொழில் போன்று, அப்பகுதியில் இடம்பெறும் குற்றங்களைக் களைவதில் திருஅவையின் பணிகளுக்கு உதவ வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

அமேசான் பகுதியில் பூர்வீக இன மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து, 11வது பொது அமர்விலும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட மாமன்றத் தந்தையர், அமேசான் பகுதியில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும், ஒரு நிரந்தர கண்காணிப்பு குழு தேவை என்று தெரிவித்தனர்.

கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களில், மாணவர்கள் பூர்வீக இன மக்கள் பற்றி விருப்பப் பாடங்களாக எடுத்து படிப்பதற்கு ஊக்குவிக்கப்படல், அமேசான் பகுதியில் தூதுரைப்பணியாளர்களின் பணிகள், மறைசாட்சிகளின் சாட்சியங்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகளில் சவால்கள், திருப்பலி, பெண்களின் இறைப்பணி போன்ற தலைப்புக்களிலும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

இச்செவ்வாயன்று நடந்த 11வது பொது அமர்வு பற்றிய செய்தியாளர் சந்திப்பை  திருப்பீட சமூகத்தொடர்பு அவைத் தலைவர் பவுலோ ரூஃபினி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அச்சந்திப்பில் பெரு, பொலிவியா, அர்ஜென்டீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாமன்ற பிரதிநிதிகளும், இந்த மாமன்றத்தின் சமூகத்தொடர்பு குழுவின் செயலர், இயேசு சபை அருள்பணி ஜாக்கோமோ கோஸ்தா அவர்களும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்

15 October 2019, 15:00