தேடுதல்

Vatican News
2019.10.15 அமேசான் சிறப்பு ஆயர்கள்  மாமன்றம் 2019.10.15 அமேசான் சிறப்பு ஆயர்கள் மாமன்றம்  (Vatican Media)

பொதுநிலை விசுவாசிகளின் பணிகளுக்கு பாராட்டு

அமேசான் பகுதியில், இறைவார்த்தையால் மேலும் மேலும் வலுப்படுத்தப்பட்ட திருஅவையை உருவாக்குவது, அப்பகுதியில் திருஅவையின் மேய்ப்புப்பணி சவால்களில் ஒன்றாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

ஒருங்கிணைந்த சூழலியல், குறிப்பாக, மனித வாழ்வுக்கு முக்கிய மற்றும், அடிப்படை தேவையாக இருக்கின்ற தண்ணீர் பாதுகாக்கப்படுவதற்கு, மறைக்கல்வி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்று, அமேசான் சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தில், இத்திங்கள் மாலை பொது அமர்வில் கூறப்பட்டது.

அக்டோபர் 14, இத்திங்கள் மாலை 4.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில், 177 மாமன்றத் தந்தையர், வல்லுனர்கள், பார்வையாளர்கள் மற்றும், இதில் கலந்துகொள்ள சிறப்பாக அழைக்கப்பட்டவர்கள் அனைவரோடும், இம்மாமன்றத்தின் பத்தாவது பொது அமர்வு ஆரம்பமானது.

நற்செய்தி அறிவிப்பு, திருஅவையில் பொதுநிலையினர் மற்றும் பெண்களின் பங்கு, சிறார் மற்றும், வயது வந்தோரில் நலிந்தவர்களைப் பராமரித்தல், ஆயர் பேரவைகள் மற்றும், துறவு சபைகள், இறையழைத்தல்களை ஊக்குவிக்க மேய்ப்புப்பணி மற்றும், இளையோர்க்கு இறைப்பணி, தண்ணீரின் முக்கியத்துவம், சமூகத்தொடர்புகளின் சவால்கள் போன்ற தலைப்புகளில், அமேசான் சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தில், இத்திங்கள், காலை, மாலை பொது அமர்வுகளில் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன.

மேய்ப்புப்பணி சவால்

அமேசான் பகுதியில், இறைவார்த்தையால் மேலும் மேலும் வலுப்படுத்தப்பட்ட திருஅவையை உருவாக்குவது, அப்பகுதியில் திருஅவையின் மேய்ப்புப்பணி சவால்களில் ஒன்று என்றும், இத்தகைய திருஅவையை அமைப்பதற்கு, கூட்டுப்பண்பில் ஆற்றப்படுவது குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டுமென்றும், மாமன்றத் தந்தையர் கருத்து தெரிவித்தனர்.

திருஅவையின் மேய்ப்புப்பணியில், பொதுநிலையினரின் பணிகள் ஊக்குவிக்கப்படவும், நிரந்தர திருத்தொண்டர்கள் உருவாக்கப்படவும் கேட்டுக்கொண்ட மாமன்றத் தந்தையர், சிறார், பாலியல்முறையில் பயன்படுத்தப்படுவது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியம் எனவும் வலியுறுத்தினர்.

இந்த பொது அமர்வின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

15 October 2019, 15:03