அமேசான் மாமன்றத் தந்தையர்களில் ஒருவரான இயேசு சபை கர்தினால் பேத்ரோ பரெத்தோ அமேசான் மாமன்றத் தந்தையர்களில் ஒருவரான இயேசு சபை கர்தினால் பேத்ரோ பரெத்தோ 

திருமணமாகா நிலை திருஅவையில் பாதுகாக்கப்படும்

அருள்பணியாளர்களும், துறவியரும் மனமுவந்து ஏற்கும் திருமணமாகா நிலையை மாற்றும் கருத்து, அமேசான் சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தில் ஒருபோதும் எழவில்லை - கர்தினால் பேத்ரோ பரெத்தோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அருள்பணியாளர்களும், துறவியரும் மனமுவந்து ஏற்கும் திருமணமாகா நிலையை மாற்றும் கருத்து, அமேசான் சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தில் ஒருபோதும் எழவில்லை என்று, மாமன்றத் தந்தையர்களில் ஒருவரான கர்தினால் பேத்ரோ பரெத்தோ (Pedro Barreto) அவர்கள் செனித் (Zenit) கத்தோலிக்க இதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

திருமணமாகா நிலை, இறைவனின் கொடை

அருள்பணியாளர்களும், துறவியரும் மேற்கொள்ளும் திருமணமாகா நிலை, இறைவன் திருஅவைக்கு வழங்கியுள்ள ஒரு கொடை என்பதையும், அக்கொடை, திருஅவையில் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும், கர்தினால் பரெத்தோ அவர்கள், தன் பேட்டியில் வலியுறுத்திக் கூறினார்.

அமேசான் பகுதியில் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அப்பகுதியில் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நிரந்தர தியாக்கோன்களை அருள் பணியாளர்களாக திருப்பொழிவு செய்வது குறித்த விவாதங்களே மாமன்ற அவையில் இடம்பெற்றன என்றும், இந்தக் கருத்துக்கும், திருமணமாகா நிலையை மாற்றும் கருத்துக்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளன என்றும், கர்தினால் பரெத்தோ அவர்கள் விளக்கம் அளித்தார்.

திருஅவையின் திறந்த மனப்பான்மை

இந்த மாமன்றத்தின் துவக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுருவின் கல்லறைக்கருகே நின்றவேளையில், அவரைச் சுற்றி, அமேசான் பகுதியின் பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய உடைகளுடன் நின்றது, கலாச்சாரங்களைக் குறித்து, திருஅவை கொண்டிருக்கும் திறந்த மனப்பான்மையை வெளிப்படுத்தியது என்று கர்தினால் பரெத்தோ அவர்கள் குறிப்பிட்டார்.

அமேசான் பகுதியில் பணியாற்றும் ஆயர்கள் மற்றும் கர்தினால்களின் சிறப்புப் பிரதிநிதியாக இந்த சிறப்பு மாமன்றத்தில் பங்கேற்ற இயேசு சபை கர்தினால் பரெத்தோ அவர்கள், அமேசான் பகுதியில் நிலவும் கலாச்சாரங்களுக்கு, திருஅவை மதிப்பு வழங்கும் அதே வேளையில், அந்த கலாச்சாரங்களைக் கொண்டுள்ள மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதும், திருஅவையின் முக்கிய பணி என்று, தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

அன்னை மரியா, திருஅவையின் வேர்

பெண்களின் பங்கு பற்றிய கேள்விக்கு பதிலளித்த கர்தினால் பரெத்தோ அவர்கள், அன்னை மரியா திருஅவையின் வேராக செயலாற்றுவதுபோல், பெண்களும், திருஅவையின் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்பது, அமேசான் பகுதிக்கு மட்டுமல்ல, உலகமெங்கும் உணரப்படவேண்டும் என்று கூறினார். (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2019, 15:28