அமேசான் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொது அமர்வு அமேசான் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொது அமர்வு 

அமேசானில் அருள்சகோதரிகளின் இருப்பு மிகவும் பலனுள்ளது

பெண் துறவிகள், பல நேரங்களில் பூர்வீக இன மக்களிடம் ஒப்புரவு அருள்சாதனத்தைக் கேட்கிறோம், மனம்வருந்தும் மனிதரோடு சேர்ந்து செபித்து ஆறுதல் வழங்குகிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 07, இத்திங்கள் காலையில் முதல் அமர்வில் உரையாற்றிய, அமலமரி மற்றும் சியன்னா புனித கத்ரீன் மறைப்பணி அருள்சகோதரிகள் சபையின் அருள்சகோதரி Alba Teresa Cediel Castillo அவர்கள், துறவு வாழ்வில் பூர்வீக இனப் பெண்கள் மற்றும், பெண்கள் சார்பாக, இம்மாமன்றத்தில் கலந்துகொள்வது குறித்த மகிழ்வைத் தெரிவித்தார்.

அமேசான் பகுதியில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசிய அச்சகோதரி, அந்தச் சவால்களுக்கு, இந்த மாமன்றம் பதில் வழங்கும் என்று தான் நம்புவதாகவும்  தெரிவித்தார்.

இத்திங்கள் செய்தியாளர் சந்திப்பிலும் பேசிய அருள்சகோதரி ஆல்பா தெரேசா அவர்கள், அமேசான் கிராமங்களில் இறைப்பணியாற்றுவதற்கு அருள்பணியாளர்கள் மிக, மிகக் குறைவாகவே உள்ளனர், இவர்கள், இறைப்பணியாற்ற, ஒரு கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்திற்கென சென்றுகொண்டே இருப்பார்கள், பெண் துறவிகளே எப்போழுதும் அம்மக்களுடன் இருப்பார்கள் என்று தெரிவித்தார்.  

அமேசான் பகுதியில், பெண் துறவு சபைகள் ஆற்றிவரும் இறைப்பணிகள் உண்மையிலேயே மிகவும் மகத்தானவை என்று சொல்லி, அவர்களின் அனுபவங்களை எடுத்துரைத்தார் அருள்சகோதரி ஆல்பா தெரேசா.

பூர்வீக இன மக்களோடு பல நிகழ்வுகளில் பங்கெடுக்கின்றோம், அருள்பணியாளர் இருக்கமுடியாத நேரங்களில், திருமுழுக்குத் தேவைப்படுகையில், அருள்சகோதரிகளே அதனை வழங்குகிறோம், யாராவது திருமணம் செய்துகொள்ள விரும்பினால், நாங்கள் அந்த இடத்தில் இருந்து அந்த தம்பதியரின் அன்பிற்குச் சாட்சிகளாக உள்ளோம் என்றார் அச்சகோதரி.

பல நேரங்களில் பூர்வீக இன மக்களிடம் ஒப்புரவு அருள்சாதனத்தைக் கேட்கிறோம்,   பெண் துறவிகளாகிய நாங்கள், பாவங்களுக்குப் பரிகாரம் வழங்க முடியாது, ஆனால், இதயத்தின் உள்ளாழத்தில் மனம்வருந்தும் மனிதரோடு சேர்ந்து தாழ்ச்சியுடன் கடவுளிடம் செபித்து ஆறுதல் வழங்குகிறோம் என்று தெரிவித்தார், அருள்சகோதரி ஆல்பா தெரேசா.

தென் அமெரிக்க நாடாடன கொலம்பியாவில் ஆரம்பிக்கப்பட்ட இச்சகோதரியின் சபை, பூர்வீக இன மக்கள் மத்தியில், குறிப்பாக, பெண்கள் மத்தியில் பணியாற்றி வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2019, 16:21