அமேசான் ஆயர்கள் மாமன்றம் அமேசான் ஆயர்கள் மாமன்றம் 

திருஅவை மறைப்பணிகளில் இயேசு கிறிஸ்துவே மையம்

அமேசான் பகுதி சவால்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டும் விதமாக புதிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமேசான் பூர்வீகக் குடியினரிடையே மறைப்பணியாற்றுதலை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தின் முதல் வார இறுதிக் கூட்டத்தில், திருஅவையின் மறைப்பணிகளில் இயேசு கிறிஸ்துவின் மையத்தன்மை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

நற்செய்தி அறிவிப்பு என்பது தனியாக மேற்கொள்ளப்படுவதில்லை என்பதால், அமேசான் பகுதியில் எதிர்நோக்கப்படும் சவால்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டும் விதமாக புதிய குழு ஒன்றும் சனிக்கிழமை மாலை கூட்டத்தில் உருவாக்கப்பட்டது.

அமேசான் பகுதியில் பணிபுரிவதற்கு அருள்பணியாளர்கள் மிகக்குறைவாக இருப்பதை மனதில்கொண்டு, குருத்துவம் மற்றும் கன்னிமை குறித்த விவாதங்களும் இடம்பெற்றன.

பெண்களை மறைப்பணிகளில் இன்னும் அதிகம் அதிகமாக ஈடுபடுத்துவது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

உலகமயமாக்கல் என்பது, பல்வேறு நல்விளைவுகளைக் கொணர்ந்துள்ள போதிலும், முதலாளித்துவத்திற்கும், உலகாயுதப் போக்குகளுக்கும் பெருமளவில் உதவி வருகிறது என்பது குறித்த கவலையையும் வெளியிட்ட இந்த ஆயர்கள் மன்றக் கூட்டம், கடந்த வார இறுதி அமர்வில், இன்றைய முன்னேறிய உலகம் மலிவான பொருட்களை நாடிச் செல்வதால், இத்தகைய தயாரிப்புகளில் தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டிருந்த பழங்குடி இனங்கள், பெரும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அமேசான் பகுதி மக்களின் நில உரிமைகள் பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 October 2019, 15:46