தேடுதல்

பூமியைப் பாதுகாக்கும் இளையோரின் கரங்கள் பூமியைப் பாதுகாக்கும் இளையோரின் கரங்கள் 

வருங்காலத் தலைமுறைக்கு வழங்கவேண்டிய கொடை

அடுத்த தலைமுறையினருக்கு வழங்கவேண்டிய பாரம்பரியச் சொத்தான இப்பூமியைப் பாதுகாப்பது இன்றையத் தலைமுறையினரின் கடமை - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன்றையத் தலைமுறையினரின் கரங்களில் பூமிக்கோளம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, வருங்காலத் தலைமுறைக்கு, இந்த கொடையை, பொறுப்புடன் ஒப்படைக்கவேண்டியது, இத்தலைமுறையினரின் கடமை என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. அவையில் வழங்கிய உரையில் கூறினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், அக்டோபர் 15, இச்செவ்வாயன்று, நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகள் குறித்து ஐ.நா. பொது அவையின் 74வது அமர்வில் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

தலைமுறைகளுக்கிடையே நிலவவேண்டிய ஒருங்கிணைப்பும் நீடித்திருக்கக்கூடிய முன்னேற்றமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலில் கூறியுள்ளதை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

நீடித்திருக்கக்கூடிய முன்னேற்றம் என்பதை, பொருளாதார முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் தொழில்நுட்ப விரிவாக்கம் என்ற பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பதைக் காட்டிலும், இவை அனைத்தையும் இணைத்துச் சிந்திப்பது, பயனளிக்கும் ஒரு முயற்சி என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

தலைமுறையினருக்கிடையே நிலவவேண்டிய ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவை, தலைமுறையினருக்கிடையே நிலவும் நீதியின் அடிப்படையில் உருவாகவேண்டும் என்றும், அடுத்த தலைமுறையினருக்கு வழங்கவேண்டிய பாரம்பரியச் சொத்தான இப்பூமியைப் பாதுகாப்பது, இன்றையத் தலைமுறையினரின் கடமை என்றும் பேராயர் அவுசா அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2019, 15:19