தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வியுரையில் பல்சமய வல்லுனர்கள் புதன் மறைக்கல்வியுரையில் பல்சமய வல்லுனர்கள்   (Vatican Media)

காந்தி ஜெயந்தியையொட்டி பல்சமயத் தலைவர்கள்

“உலகளாவிய நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கு, உடன்பிறப்பு அன்பு மற்றும், வன்முறையற்ற நிலை” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், பல்வேறு மத மரபுகளைச் சார்ந்த ஐம்பது வல்லுனர்கள் கலந்துகொண்டனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“அகிம்சையின் திருத்தூதராகிய” மகாத்மா காந்தி அவர்கள் பிறந்ததன் 150ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் விதமாக, திருப்பீட பல்சமய உரையாடல் அவை, அக்டோபர் 1, இத்திங்களன்று ஒரு நாள் கருத்தரங்கை உரோம் நகரில் நடத்தியது.

இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட பல்சமய வல்லுனர்கள், அக்டோபர் 2ம் தேதி, இப்புதனன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்ற திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரையிலும் கலந்துகொண்டனர். திருத்தந்தையும், மகாத்மா காந்தி அவர்கள் பற்றிய கருத்தரங்கில் கலந்துகொண்ட இவர்களை வரவேற்பதில் மிகவும் மகிழ்கிறேன் என்று, இத்தாலிய மொழியில் அவர்களை வாழ்த்தினார்.

இக்கருத்தரங்கு பற்றி செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிக்கை வெளியிட்ட, திருப்பீட பல்சமய உரையாடல் அவை, “உலகளாவிய நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கு, உடன்பிறப்பு அன்பு மற்றும், வன்முறையற்ற நிலை” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்வேறு மத மரபுகளைச் சார்ந்த, அமைதி மற்றும், வன்முறையற்ற நிலையை ஊக்குவிக்கும் ஐம்பது வல்லுனர்கள் கலந்துகொண்டனர் என அறிவித்துள்ளது.

“உலக அமைதி மற்றும், ஒன்றிணைந்த வாழ்வுக்கு மனித உடன்பிறந்தநிலை” என்ற தலைப்பில், அபு தாபியில் கையெழுத்தான ஏட்டை மையப்படுத்தி, வன்முறை நிறைந்த இன்றைய உலகுக்கு, அமைதி, நல்லிணக்கம் மற்றும், உடன்பிறப்பு உணர்வை ஊக்குவிப்பது எவ்வளவு முக்கியம் என்பது பற்றி, இக்கருத்தரங்கில் சிந்தனைகளும், கலந்துரையாடல்களும் இடம்பெற்றன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

02 October 2019, 16:01