கர்தினால் Miguel Ángel Guixot கர்தினால் Miguel Ángel Guixot  

வெறுப்புக்கு மாற்றாக, சந்திக்கும் கலாச்சாரம்

வெறுப்பு நிறைந்த சொற்களை ஆயுதங்களாக மாற்றத் துடிக்கும் ஊடகங்களின் போக்கு வளர்ந்துவரும் இன்று, உரையாடலை வளர்க்க, உண்மையான மதங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் - பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மதங்கள், மற்றும் மதங்களின் கிளைப்பிரிவுகள் தங்கள் தனித்துவத்தைக் காப்பதற்காக, வெறுப்பு நிறைந்த அறிக்கைகளை வெளியிடுவதை நியாயப்படுத்தும் போக்கும், வெறுப்பு நிறைந்த சொற்களை ஆயுதங்களாக மாற்றத் துடிக்கும் ஊடகங்களின் போக்கும் வளர்ந்துவரும் இன்று, உரையாடலை வளர்க்க உண்மையான மதங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பல்சமய மற்றும் பன்முக கலாச்சார உரையாடல்களை வளர்க்கும் மன்னர் Abdullah Bin Abdulaziz பன்னாட்டு மையம், வியென்னா நகரில், அக்டோபர் 30, இப்புதனன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டு கருத்தரங்கில், பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Miguel Ángel Guixot அவர்கள் வழங்கிய உரையில், இவ்வாறு கூறினார்.

பிளவையும், மோதல்களையும் வளர்ப்பதில் தீவிர ஆர்வம் கொண்டுள்ள இவ்வுலகில், உரையாடல் மற்றும் சந்திப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதும், ஏனைய மதத்தவர் மீது உண்மையான மதிப்பை உருவாக்குவதும், அனைத்து உண்மையான மதங்களின் தலைவர்கள் முன் உள்ள முக்கிய கடமை என்று, கர்தினால் Guixot அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

நம்மிடையே அதிக வேற்றுமைகள் உள்ளன என்று நம்மை சொல்லவைக்கும் மேலோட்டமான பார்வையை அகற்றி, இன்னும் ஆழமாகத் தேடினால், நம்மிடையே உள்ள ஒற்றுமைகள் வெளிவரும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அல் அசார் தலைமை இமாம் அவர்களும் இணைந்து, இவ்வாண்டு பிப்ரவரி மாதம், அபு தாபியில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது என்பதை, கர்தினால் Guixot அவர்கள் தன் உரையில் நினைவுறுத்தினார்.

நம் வேற்றுமைகளையும், வெறுப்பு மொழிகளையும் தூண்டிவிடும் தவறான செய்திகளைப் பரப்புவதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிப்பது வேதனை தரும் நிலை என்பதையும் கர்தினால் Guixot அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2019, 14:45