தேடுதல்

Vatican News
லொரேத்தோ மரியா லொரேத்தோ மரியா  (AERONAUTICA MILITARE)

லொரேத்தோ மரியாவின் திருநாள், அனைவராலும் சிறப்பிக்கப்படும்

இதுவரை விருப்பப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வந்த ஒரு திருநாளாக இருந்த லொரேத்தோ திருத்தலத்தின் கன்னி மரியாவின் திருநாளை, அனைவராலும் சிறப்பிக்கப்படவேண்டிய ஒரு திருநாளாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

லொரேத்தோ திருத்தலத்தின் கன்னி மரியாவின் திருநாள், இதுவரை விருப்பப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வந்த ஒரு திருநாளாக இருந்ததை மாற்றி, இத்திருநாளை, உரோமைய வழிபாட்டு ஆண்டில், அனைவரும் சிறப்பிக்கவேண்டிய ஒரு திருநாளாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 10ம் தேதி, அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு சிறப்பிக்கப்பட்டு வந்த இத்திருநாள், இவ்வாண்டு முதல், அதே டிசம்பர் 10ம் தேதி, அனைவரும் சிறப்பிக்கவேண்டிய ஒரு முக்கியத் திருநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று, திருப்பீட இறை வழிபாடு மற்றும் அருளடையாளங்களின் சட்டங்கள் பேராயம், அக்டோபர் 31, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.

கடந்த சில நூற்றாண்டுகளாக, லொரேத்தோ திருத்தலத்தில் உள்ள அன்னை மரியாவின் இல்லம், பல கோடி பக்தர்களால் தரிசிக்கப்பட்டு வந்ததையும், மனுவுருவான இறைவன் என்ற மறையுண்மையை உணர்வதற்கு அத்திருத்தலம் உதவியாக உள்ளது என்பதையும் மனதில் கொண்டு, திருத்தந்தை இப்புதிய ஆணையை வெளியிட்டுள்ளார் என்று திருப்பீட இறை வழிபாட்டு பேராயம் கூறியுள்ளது.

விரைவில் துவங்கவிருக்கும் புதிய வழிபாட்டு ஆண்டின் கால அட்டவணையில் டிசம்பர் 10ம் தேதியை, லொரேத்தோ திருத்தலத்தின் அன்னை மரியாவின் திருநாளாகக் குறிப்பிடப்படுவது அவசியம் என்று, திருப்பீட இறை வழிபாடு மற்றும் அருளடையாளங்களின் சட்டங்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

31 October 2019, 14:40