தேடுதல்

Vatican News
Ordres et décorations du Saint-Siège நூல் வெளியீட்டு விழாவில் உரை வழங்கும் கர்தினால் பரோலின் Ordres et décorations du Saint-Siège நூல் வெளியீட்டு விழாவில் உரை வழங்கும் கர்தினால் பரோலின் 

"திருப்பீடத்தின் விருதுகளும், அணிசெய்யப்படுதலும்"

நல்வாழ்வின் எடுத்துக்காட்டுகளாக வாழ்வோருக்காக தாகம் கொண்டிருக்கும் இன்றைய உலகில், திருப்பீடத்தால் மரியாதை செய்யப்பட்டவர்களின் வாழ்க்கை, பலருக்கும் உந்துசக்தியாக விளங்கும் - கர்தினால் பரோலின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வரலாற்றில், திருஅவை வழங்கிவந்த விருதுகள், திருத்தந்தையையும், திருப்பீடத்தையும் பாதுகாத்தவர்களுக்கு மட்டும் அல்ல, மாறாக, அமைதியையும், நீதியையும் இவ்வுலகில் நிலைநாட்டியவர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருப்பீடத்தின் விருதுகள் - வரலாறு

"திருப்பீடத்தின் விருதுகளும், அணிசெய்யப்படுதலும்" (Ordres et décorations du Saint-Siège) என்ற தலைப்பில், பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட ஒரு நூல், அக்டோபர் 29, இச்செவ்வாயன்று மாலை, வெளியிடப்பட்ட விழாவில் பேசிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருப்பீடம் வழங்கிவரும் விருதுகள், பட்டங்கள் ஆகியவை குறித்த வரலாற்றை சுருக்கமாக விளக்கிக் கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவையும், திருப்பீடமும் பல்வேறு நாடுகளின் எதிர்ப்புக்களை சந்திக்கவேண்டியிருந்தபோது, திருஅவையையும், திருத்தந்தையையும் பாதுகாக்க முன்வந்து போராடியவர்களை, திருப்பீடம், மரியாதை செய்வதில் துவங்கிய ஒரு வழக்கம், பின்னர், உலகில் பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்றவர்களையும் மரியாதை செய்யும் வழக்கமாக மாறியது என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

அறியப்படாத நாயகர்கள்

இந்த வரலாற்று நாயகர்களில் அதிகம் அறியப்படாத பலரை, இந்நூலின் வழியே, வெளிச்சத்திற்குக் கொணர்ந்த இந்நூலின் ஆசிரியர் Dominique Henneresse அவர்களை கர்தினால் பரோலின் அவர்கள் பாராட்டினார்.

நல்வாழ்வின் எடுத்துக்காட்டுகளாக வாழ்வோருக்காக இவ்வுலகம் தாகம் கொண்டிருக்கும் இன்றையச் சூழலில், திருப்பீடத்தால் மரியாதை செய்யப்பட்டவர்களின் வாழ்க்கை, பலருக்கும் உந்துசக்தியாக விளங்கும் என்று தான் நம்புவதாக, கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

30 October 2019, 15:23