தேடுதல்

Vatican News
அமேசான் மாமன்றத்தில்  கர்தினால் பால்திச்சேரி அமேசான் மாமன்றத்தில் கர்தினால் பால்திச்சேரி   (AFP or licensors)

தூய ஆவியாரின் வழிகாட்டுதலில் புதிய பாதைகளை நோக்கி...

அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தில், இத்திங்கள் காலை துவக்க நிகழ்வில், உலக ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலர் கர்தினால் பால்திச்சேரி அறிக்கை சமர்ப்பித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தில், அக்டோபர் 07, இத்திங்கள் காலை துவக்க நிகழ்வில் அறிக்கை சமர்ப்பித்த, உலக ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி அவர்கள், தூய ஆவியாரின் வழிகாட்டுதலில், புதிய பாதைகளைத் தேடுவதற்கு நம்மை அர்ப்பணிக்க விரும்புகிறோம் என்று கூறினார்.

இம்மாமன்றத்தின் இரு கூறுகளைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் பால்திச்சேரி அவர்கள், முதலாவது, அமேசான், திருத்தூதுப்பணி நிலமாக அமைந்துள்ளதால், நற்செய்தியைப் பண்பாட்டுமயமாக்குவதற்கு, கலாச்சாரங்களை மையப்படுத்தி நற்செய்தி அறிவிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

இரண்டாவதாக, அமேசான், ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியைக் கொண்டிருந்தாலும், இந்த மாமன்றம், உலகளாவிய திருஅவையைச் சார்ந்ததாக உள்ளது என்பதால், இதில் பங்கெடுப்பவர்கள், அமேசான் பகுதி தவிர, ஏனையப் பகுதிகள் மற்றும், கண்டங்களைச் சேர்ந்த திருஅவை உறுப்பினர்களாக உள்ளனர் என்றும், கர்தினால் கூறினார்.

அமேசானிலுள்ள திருஅவை பற்றியும், அங்குள்ள பிரச்சனைகள், மற்றும் சவால்கள் பற்றியும், உலகளாவிய திருஅவை அக்கறை கொண்டுள்ளது என்று உரையாற்றிய கர்தினால் பால்திச்சேரி அவர்கள், இயேசு கிறிஸ்து வாழ்கின்ற ஒரே திருஅவையில், ஓர் உலகளாவிய கிராமத்தின் ஓர் அங்கமாக நாம் எல்லாரும் உணர வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

மாமன்றத்தில் பங்கெடுப்பவர்கள்

185 மாமன்றத் தந்தையர், 6 கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகள், 12 சிறப்பு விருந்தினர், 25 வல்லுனர்கள், 55 ஓட்டுரிமையற்ற பார்வையாளர்கள் ஆகியோர் இதில் பங்கு கொள்கின்றனர், இவர்களில், அமேசான் பகுதியில் மக்கள் எளிதில் செல்லக்கூடாத தொலைதூர இடங்களில் மேய்ப்புப்பணியாற்றுவோர் மற்றும் வல்லுனர்களும் உள்ளனர், பல்வேறு இன, கலாச்சார, மற்றும், மத மரபுகளைக்கொண்ட, பல்வேறு பூர்வீக இனக்குழுக்களிலிருந்து 16 பிரதிநிதிகளும், இம்மாமன்றத்தில் பங்குகொள்கின்றனர் என்பதையும், தனது அறிக்கையில் குறிப்பிட்டார், கர்தினால் பால்திச்சேரி.

இம்மாமன்றம் நடைபெறும் முறை பற்றி விளக்கிய கர்தினால் பால்திச்சேரி அவர்கள், பொது அமர்வுகள், அக்டோபர் 10ம் தேதியிலிருந்து செயல்படும் சிறு குழுக்கள், பிரதிநிதிகளின் பகிர்வுகள், உடன்பிறந்த உணர்வில் கருத்துப் பரிமாற்றங்கள் போன்றவை இடம்பெறும் எனவும், அக்டோபர் 21ம் தேதி இறுதி அறிக்கை மாமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும், 26ம் தேதி அதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படும், அத்துடன் மாமன்றத்தின் பணிகள் நிறைவடையும் எனவும் கூறினார்.

07 October 2019, 15:57