தேடுதல்

Vatican News
ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத்தில், திருப்பீடத்தின் பிரதிநிதி பேராயர் ஈவான் யூர்க்கோவிச் ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத்தில், திருப்பீடத்தின் பிரதிநிதி பேராயர் ஈவான் யூர்க்கோவிச் 

உரையாடல் வழியே, பிளவுகளும், பிரிவுகளும் சீரமைக்கப்படும்

கட்டாயத்தின் பேரில் குடிபெயரும் நிலைக்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாம் இன்று சந்திக்கும் மிகப்பெரும் சவால் - பேராயர் ஈவான் யூர்க்கோவிச்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கட்டாயத்தின் பேரில் குடிபெயரும் நிலைக்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாம் இன்று சந்திக்கும் மிகப்பெரும் சவால் என்றும், இத்தகையைச் சூழல் பல்லாயிரம் மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்தாக உள்ளது என்றும் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு அவையில் கூறினார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் ஈவான் யூர்க்கோவிச் அவர்கள், அக்டோபர் 9 இப்புதனன்று ஜெனீவாவில் நடைபெற்ற 70வது அமர்வில் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

பன்முகத் தன்மையை வலியுறுத்தும் சமுதாயம்

நாம் வாழும் சமுதாயங்களில் பன்முகத் தன்மையை வலியுறுத்துவதும், வளர்ப்பதும் நம் தலையாய கடமை என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் ஐ.நா. பொது அவையில் அண்மையில் கூறியதை தன் உரையில் நினைவுறுத்திய பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், பன்முகத் தன்மையை இழப்பதால், அன்னியரை வரவேற்க தயங்கும் மூடிய மனநிலையில் வாழ்கிறோம் என்று கூறினார்.

பல்வேறு மனித குழுக்களுடன் உரையாடலை மேற்கொள்வதன் வழியே, மனித சமுதாயத்தில் காணப்படும் பிளவுகளும், பிரிவுகளும் சீரமைக்கப்படும் என்று, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.

மக்கள் கட்டாயமாக குடிபெயரும் கொடுமையை உருவாக்கும் காரணங்களை அறிவது, அக்காரணங்களை நீக்குவதற்கு சட்ட வழிகளில் தீர்வுகள் காண்பது, குடிபெயரும் மக்களின் நலவாழ்வு மற்றும் அவர்களது ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை உறுதி செய்வது என்ற மூன்று பரிந்துரைகளை பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், தன் உரையில் பதிவுசெய்தார்.

புலம்பெயர்ந்தோரின் உருவச் சிலை

குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோரின் 105வது உலக நாள், இவ்வாண்டு செப்டம்பர் 29ம் தேதி சிறப்பிக்கப்பட்ட வேளையில், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், இந்நாளையொட்டி சிறப்புத் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு மதங்களையும், கலாச்சாரங்களையும் கொண்ட குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உருவச் சிலை ஒன்றை திறந்து வைத்தது குறித்தும், பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

"அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு" (எபிரேயர் 13:2) என்று, எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் கூறப்பட்டுள்ள சொற்கள், இந்த உருவச்சிலை உருவாக காரணமாக அமைந்தது என்பதையும், பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

10 October 2019, 14:54