தேடுதல்

Vatican News
இனவெறிக்கு எதிரான ஊர்வலம் இனவெறிக்கு எதிரான ஊர்வலம்  (AFP or licensors)

சகிப்புத்தன்மை குறைவது கண்டு திருப்பீடம் கவலை

புலம் பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் மீது சந்தேகத்தையும், அச்சத்தையும் வளர்க்கும் மனப்பான்மை வளர்ந்து வருவதையும், தங்களைச் சாராதவர்கள் மீது சகிப்புத்தன்மை குறைந்து வருவதையும், திருப்பீடம் கவலையுடன் கண்ணோக்குகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனிதர்கள் அனைவரும் சமமான உரிமையும் மாண்பும் உடையவர்கள் என்பதை, அனைத்துலக மனித உரிமைகள் அறிக்கை வலியுறுத்தி வந்தாலும், இனவெறியையும், வேற்று இனத்தவர் மீது அச்சத்தையும் வளர்க்கும் போக்கு இவ்வுலகில் பெருகி வருவது வேதனை அளிக்கிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், அக்டோபர் 30, இப்புதனன்று ஐ.நா.வின் மனித உரிமைகள் அவையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய வேளையில், இவ்வாறு கூறினார்.

இன்றைய உலகில், புலம் பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் மீது சந்தேகத்தையும் அச்சத்தையும் வளர்க்கும் மனப்பான்மை வளர்ந்து வருவதையும், தங்களைச் சாராதவர்கள் மீது சகிப்புத்தன்மை குறைந்து வருவதையும், திருப்பீடம் கவலையுடன் கண்ணோக்குகிறது என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

அக்கறையற்ற நிலையையும், காரணமற்ற அச்சங்களையும் நீக்குவதற்கு, சமயங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையே உண்மையான உரையாடலும், சந்திப்பு கலாச்சாரமும் வளர்க்கப்பட வேண்டும் என்பதில் திருப்பீடம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்று பேராயர் அவுசா அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

மனிதர்கள் அனைவரும் மாண்பு மிக்கவர்கள் என்ற அடிப்படை உண்மையை வளர்க்க, குழந்தைப்பருவம் முதல் பாடங்கள் கற்றுத்தரப்படவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருவதை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

31 October 2019, 14:50