தேடுதல்

அணு ஆயுத சோதனை அணு ஆயுத சோதனை 

அணு ஆயுதங்கள் மீது உலகம் காட்டும் ஆர்வம்

நாடுகளிடையே உருவான ஒப்பந்தங்களை புறந்தள்ளிவிட்டு, அணு ஆயுதங்களைக் குவிக்கும் போட்டி மீண்டும் உருவாகியிருப்பது மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது - திருப்பீடத்தின் பிரதிநிதி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாடுகளிடையே உருவான ஒப்பந்தங்களை புறந்தள்ளிவிட்டு, அணு ஆயுதங்களைக் குவிக்கும் போட்டி மீண்டும் உருவாகியிருப்பது மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் வழங்கிய உரையில் கூறினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், அக்டோபர் 22, இச்செவ்வாயன்று, அணு ஆயுத ஒழிப்பு குறித்து, ஐ.நா. அவையில், நடைபெற்ற ஓர் அமர்வில் இவ்வாறு கூறினார்.

அணு ஆயுதங்களின் பயன்பாடு, மனிதகுலத்திற்கு மட்டுமல்லாமல், பூமிக்கோளத்திற்கும் நிரந்தரமான அழிவுகளைக் கொணரும் என்பதை உலக சமுதாயம் உணர்ந்திருந்தாலும், அத்தகைய ஆயுதங்களை உருவாக்குவதிலும், அவற்றை சோதிப்பதிலும், குவித்து வைப்பதிலும் இன்னும் ஆர்வம் காட்டிவருவது வேதனையளிக்கிறது என்று பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

"தன் அணு சக்தியைக் குறித்து பெருமைப்படும் இன்றைய தலைமுறை, அந்த சக்தியைக் கொண்டு உலகில் நீதியைக் கொணரமுடியும் என்று கற்பனை செய்வது எவ்வகையிலும் அறிவு சார்ந்த முடிவு அல்ல" என்று, 'உலகில் அமைதி' என்ற திருத்தூது மடலில், புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் கூறிய சொற்களை, பேராயர் அவுசா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அணு ஆயுதங்களின் பெருக்கத்தைத் தடுக்கும் NPT என்ற ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதன் 50 ஆண்டு நிறைவை, 2020ம் ஆண்டு சிறப்பிக்கவிருக்கும் நாம், ஆயுதங்களைக் களைந்து, ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் வழியே நம் வேறுபாடுகளைத் தீர்க்கும் வழிகளை உணர வேண்டும் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையின் இறுதியில் விண்ணப்பித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2019, 15:49