தேடுதல்

Vatican News
விண்வெளியில் செயற்கைக் கோளைக் கொண்டுசெல்ல தயாராக இருக்கும் இராக்கெட் விண்வெளியில் செயற்கைக் கோளைக் கொண்டுசெல்ல தயாராக இருக்கும் இராக்கெட் 

விண்வெளி ஆயுதக் குவிப்பு ஆபத்தானது - திருப்பீடம்

செயற்கைக்கோள்களின் உதவியுடன் விண்வெளியில் ஆயுதங்களை அனுப்ப மேற்கொள்ளப்படும் முயற்சிகள், விண்வெளி ஒப்பந்தத்திற்கு எதிரான முயற்சிகள் - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

விண்வெளியில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளும் நாடுகள், இவ்வுலக நாடுகளின் நன்மையை மனதில் கொண்டு தங்கள் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று 1967ம் ஆண்டு வெளியான விண்வெளி ஒப்பந்தம் கூறுவதை, திருப்பீடம் முற்றிலும் ஆதரிக்கிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

விண்வெளி ஆயுதப் போட்டியைத் தடுக்க...

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் தடுத்தல் என்ற தலைப்பில், அக்டோபர் 29, இச்செவ்வாயன்று நடைபெற்ற கருத்துப்பரிமாற்றத்தில் இவ்வாறு கூறினார்.

விண்வெளியில் ஏவப்படும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கவும், செயற்கைக்கோள்களின் உதவியுடன் விண்வெளியில் ஆயுதங்களை அனுப்பவும், மேற்கொள்ளப்படும் முயற்சிகள், விண்வெளி ஒப்பந்தத்திற்கு எதிரான முயற்சிகள் என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

மனித முன்னேற்றத்திற்காக, விண்வெளி ஆய்வுகள்

செயற்கைக்கோள்களின் உதவியுடன் நடைபெறும் பருவநிலை கண்காணிப்பு, வேளாண்மை ஆய்வுகள், நாட்டின் பாதுகாப்பு போன்ற செயல்பாடுகளை ஒவ்வொரு நாடும் பின்பற்றும்போது, தேவையற்ற போட்டிகளும், மோதல்களும் தவிர்க்கப்படும் என்று பேராயர் அவுசா வலியுறுத்திக் கூறினார்.

விண்வெளி ஆய்வுகள், மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தோடு, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.

30 October 2019, 15:38