தேடுதல்

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் அவுசா ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் அவுசா 

இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட அமைப்பு, அநீதியானது

மனித உரிமைகள் குறித்த நம் கொள்கைகளுக்கும், இவ்வுலகின் உண்மை நிலைகளுக்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி இருப்பதை மறுக்க முடியாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

மனித உரிமைகள் குறித்த நம் உறுதியான கொள்கைகளுக்கும், இவ்வுலகின் உண்மை நிலைகளுக்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி இருப்பதை மனதில் கொண்டு, மனித உரிமைகளை பாதுகாப்பதையும் ஊக்குவிப்பதையும் உடனடியாக ஆற்றவேண்டிய தேவை உள்ளது என திருப்பீடம் விண்ணப்பிப்பதாக ஐ.நா. பொது அவையில் அறிவித்தார் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் அவுசா அவர்கள், மனித உரிமைகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 70ம் ஆண்டும், வியன்னா அறிக்கையின் 25ம் ஆண்டும் அண்மையில் சிறப்பிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அனைத்து மனிதர்களின் மீறமுடியாத உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டிய கடமை மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டிய நேரமிது என்றார். 

இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட இன்றைய உலகின் பொருளாதார அமைப்பு முறையில், பல்வேறு அநீதிகள் நிலவுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டிய பேராயர், உலகில் நுழைவதற்கு தடைசெய்யப்படும் குழந்தைகள், கல்வி கற்பதற்கான வாய்ப்புகளின்மை, மக்கள் காணாமல்போதல், அடிமைநிலை, சித்ரவதைகள் போன்றவை குறித்த தன் கவலையையும் வெளியிட்டார்.

நாடுகளில் நியாயமான சுதந்திர தேர்தல்கள் இடம்பெறுதல், மோதல்களின்போது மக்களின் உரிமைகள் மதிக்கப்படுதல், சட்ட விரோத மரணதண்டனைகளைத் தடுத்தல், உணவுக்கும் குடிநீருக்கும் உரிய மக்களின் உரிமைகளை உறுதிசெய்தல், மத நம்பிக்கைகளின் அடிப்படையில் சித்ரவதைகள் செய்யப்படுவதை தடைச்செய்தல், புலம்பெயர்ந்தோரை சட்டம் வழியாக பாதுகாத்தல் போன்ற விண்ணப்பங்களையும் மனித உரிமைகள் குறித்த ஐ.நா.வின் 74வது பொதுஅவைக் கூட்டத்தில் முன்வைத்தார் பேராயர் அவுசா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2019, 16:32