மியான்மாரில் நெல் வயல் மியான்மாரில் நெல் வயல் 

உணவைப் பாதுகாப்பது அறநெறி சார்ந்த கடமை

2018ம் ஆண்டில், உலகில் ஒன்பது பேருக்கு ஒருவர், அதாவது, ஏறத்தாழ 82 கோடியே 10 இலட்சம் பேர் ஊட்டச்சத்தின்றி இருந்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மில்லென்ய வளர்ச்சித்திட்ட இலக்குகள், அண்மை ஆண்டுகளில் ஏறக்குறைய நூறு கோடி மக்களை, வறுமைக்கோட்டிற்குக்கீழிலிருந்து அகற்றியுள்ளன எனினும், உலகில் பசிக்கொடுமையை முழுமையாய் நீக்குவதற்கு முயற்சிகள் அதிகம் தேவைப்படுகின்றன என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.   

ஐ.நா. நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பாக உரையாற்றும், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், வேளாண் வளர்ச்சி, உணவு பாதுகாப்பு மற்றும், ஊட்டச்சத்து என்ற தலைப்பில் ஐ.நா. பொது அவையின் 74வது அமர்வில் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

அந்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், 2018ம் ஆண்டில், உலகில் ஒன்பது பேருக்கு ஒருவர் அதாவது, ஏறத்தாழ 82 கோடியே 10 இலட்சம் பேர் ஊட்டச்சத்தின்றி இருந்தனர், ஆப்ரிக்காவின் ஏறக்குறைய எல்லாப் பகுதிகள், மற்றும் தென் அமெரிக்காவில், இந்நிலை அதிகரித்து வருகின்றது என்று கூறினார்.

மேலும், ஐந்து வயதுக்குட்பட்ட 4 கோடியே 90 இலட்சம் சிறார், கடும் ஊட்டச்சத்தின்றி உள்ளனர் என்றுரைத்த பேராயர் அவுசா அவர்கள், ஏழைகள், பசித்திருப்போர், மறக்கப்பட்டவர்கள் போன்றோர் மீது அக்கறை காட்டுவதற்கு, அனைவருக்கும் நன்னெறி சார்ந்த கடமை உள்ளது என்பதை, திருப்பீட பிரதிநிதித்துவம் நினைவுபடுத்துகின்றது என்று தெரிவித்தார்.

உலகில் ஒவ்வொருவருக்கும் போதுமான உணவு அதிகமாகவே உள்ளவேளை, உணவுப்பொருள்கள் அதிகப்படியாக நுகரப்படுவது மற்றும் அவற்றை மற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது, ஒவ்வொரு நாள் நிகழ்வாகத் தொடர்கின்றது என்றுரைத்த பேராயர், பசியால் அல்லது உணவு வீணாக்கப்படுவதால் இலட்சக்கணக்கான மக்கள் துன்புறுகின்றனர் மற்றும், மடிகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

உணவுப்பொருள்களைப் பாதுகாப்பது நம் அறநெறி சார்ந்த கடமையாகவுள்ளவேளை, வன்முறை கலாச்சாரத்திற்கு அடிப்படையாகவுள்ள, சட்ட மற்றும் சட்டவிரோத ஆயுத வர்த்தகத்தால் ஊட்டப்படும் ஆயுதக் கலாச்சாரத்திற்கு எதிராய்ச் செயல்பட்டு, உலகளாவிய அமைதி மற்றும், பாதுகாப்பை ஊக்குவிப்பது, ஐ.நா.வில் முக்கிய பணியாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார், பேராயர் அவுசா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2019, 15:34