தேடுதல்

பூர்வீக இன மக்களுக்கு திருத்தந்தை ஆறுதல் பூர்வீக இன மக்களுக்கு திருத்தந்தை ஆறுதல் 

அக்டோபர் 19 காலையில், அமேசான் பற்றிய சிலுவைப் பாதை

அமேசான் மழைக்காடுகளில் வாழ்வது, ஒரு சிலுவைப் பாதையாகவே உள்ளது. அங்கு மக்கள், சிலுவைப்பாதையின் ஒவ்வொரு நிலையையும் ஒவ்வொரு நாளும், அனுபவிக்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானில் அமேசான் உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்வோர், அக்டோபர் 16, 17 இப்புதன், இவ்வியாழன் தினங்களில், மொழிவாரியாக குழுக்களில் விவாதங்கள் மேற்கொண்டதையடுத்து, அவை பற்றிய தகவல்கள், இவ்வெள்ளியன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்கப்பட்டன.  

பிரேசில் நாட்டு Roraima ஆயர் Mário Antônio da Silva, புதிய வழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிக்கெல்லா, இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Héctor Miguel Cabrejos Vidarte, கொலம்பிய நாட்டின் பெண் துறவு சபைகள் அமைப்பின் பொதுச் செயலர், அருள்சகோதரி Daniela Adriana Cannavina ஆகியோர் இச்சந்திப்பில் கருத்துக்களைப் பரிமாறினர்.

சிலுவைப்பாதை

அக்டோபர் 19, இச்சனிக்கிழமை காலையில், அமேசான் உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்குபெறும் ஆயர்கள் பிரதிநிதிகள் குழு ஒன்று, பூர்வீக இனத் தலைவர்கள் பிரதிநிதிகளுடன், உரோம் நகரில் சிலுவைப் பாதை பக்திமுயற்சி ஒன்றை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான்-பொது இல்லம் என்ற தலைப்பில், இந்நிகழ்வை நடத்துபவர்களில் ஒருவரான அருள்சகோதரி Maria Eugenia Lloris Aguado அவர்கள், இப்பக்திமுயற்சி பற்றி செய்தியாளர்களிடம் விளக்கினார்.

உரோம் Castel Sant'Angelo என்ற நினைவிடத்திலிருந்து, வத்திக்கான் புனித பேதுரு வளாகம் வரை நடைபெறும் சிலுவைப் பாதை பக்திமுயற்சியின் ஒவ்வொரு நிலையும், அமேசான் பூர்வீக இன மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எடுத்துரைப்பதாக இருக்கும் என்று, அருள்சகோதரி Lloris Aguado அவர்கள் கூறினார்.

மேலும், இப்பக்திமுயற்சி பற்றிக் கூறிய, கொம்போனி மறைப்பணி சபையின் Antonio Soffientini அவர்கள், அமேசானில் வாழ்வது, ஒரு சிலுவைப் பாதையாகவே உள்ளது என்றும், மக்கள், சிலுவைப் பாதையின் ஒவ்வொரு நிலையையும், ஒவ்வொரு நாளும், அனுபவிக்கின்றனர் என்றும் கூறினார்.

மாமன்றத்தில் அருள்சகோதரிகள்

மேலும், பிரேசில், பெரு, கொலம்பியா ஆகிய அமேசான் நாடுகளைச் சேர்ந்த பத்து அருள்சகோதரிகள், இம்மாமன்றத்தில் பார்வையாளர்களாக கலந்துகொள்கின்றனர். இவர்களில் சிலர், பூர்வீக இனங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள், இவ்வெள்ளியன்று, உலக பெண் துறவு சபைகள் அமைப்பின் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

UISG என்ற உலக அமைப்பில், ஏறத்தாழ 1,900 பெண் துறவு சபை தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இத்தலைவர்களின் சபைகளில், ஏறத்தாழ ஐந்து இலட்சம் அருள்சகோதரிகள் உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 October 2019, 15:21