தேடுதல்

அமேசானில் மரங்கள் வெட்டப்பட்ட பகுதி அமேசானில் மரங்கள் வெட்டப்பட்ட பகுதி 

அமேசான் பகுதியில் போதைப்பொருள் பிரச்சனை

அமேசானின் சில பகுதிகளில், கொக்கோ போதைப்பொருள் வேளாண்மை, 12 ஆயிரம் ஹெக்டேரிலிருந்து, 23 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு அதிகரித்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமேசான் பகுதியில் கட்டப்படும் நீர்மின் தேக்கங்கள், காடுகளில் அரசின் அனுமதியுடன் இடம்பெறும் தீ வைப்பு, கொக்கோ போதைப்பொருள் வேளாண்மை போன்றவைகளால் இலட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் அழிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருவதால், அவை சூழலியலை மாற்றி, சில பகுதிகளில், மாபெரும் சூழலியல் கேடுகளை ஏற்படுத்தியுள்ளன என்று, அமேசான் மாமன்றத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.

இந்நடவடிக்கைகளால் குற்றங்களும், மரங்கள் அழிக்கப்படுவதும் பெருகி வருகின்றன, மற்றும், இயற்கையின் சமநிலையும் மாறி வருகின்றது என்று தெரிவித்த மாமன்றத் தந்தையர், இக்காரணங்களால், திருஅவை, உலகளாவிய அமைப்புகளில், சூழலியல் மனமாற்றத்திற்கு மிக வலுவாய், இறைவாக்குக் குரலுடன் பேச வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர்.

அக்டோபர் 09, இப்புதன் மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில் துவங்கிய, அமேசான் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஆறாவது பொது அமர்வில் உரையாற்றிய மாமன்றத் தந்தையர், சூழலியல் மனமாற்றத்தில், திருஅவையின் பங்கு பற்றி எடுத்துரைத்தனர்.

இப்புதன் மாலையில், 180 மாமன்றத் தந்தையர் பங்குகொண்ட இந்த ஆறாவது பொது அமர்வில் உரையாற்றிய பிரதிநிதிகள், அமேசானின் சில பகுதிகளில், கொக்கோ போதைப்பொருள் வேளாண்மை, 12 ஆயிரம் ஹெக்டேரிலிருந்து, 23 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு அதிகரித்துள்ளது என்றும், இதனால் போதைப்பொருள் வரத்தகமும் கடும் விளைவுகளை உருவாக்கியுள்ளது என்றும் எடுத்துரைத்தனர்.

பண்பாட்டுமயமாக்கலும், நற்செய்தி அறிவிப்பும்

இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, பண்பாட்டுமயமாக்கலையும், நற்செய்தி அறிவிப்பையும் சமநிலையில் வைப்பது குறித்து சிந்திக்குமாறு அழைப்பு விடுத்த மாமன்றத் தந்தையர், இயேசுவின் மனித பிறப்பே, பண்பாட்டுமயமாக்கலின் மாபெரும் அடையாளம் என்றும், இறைவார்த்தை, தம் அன்பை காணக்கூடியமுறையில் வெளிப்படுத்துவதற்கு, மனித உருவில் பிறந்தது என்றும் கூறினர்.

அமேசானில் திருத்தூதுப் பணியாளர்கள் ஆற்றியதுபோன்று, திருஅவையும் மக்களின் ஒவ்வொரு நாள் வாழ்விலும், மனிதஉரு எடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது என்றுரைத்த மாமன்றத் தந்தையர், திருத்தூதுப் பணியில் கூட்டுப்பண்பின் முக்கியத்துவம் குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

திருத்தூது கூட்டுப்பண்பு

அமேசான் பகுதியில் வாழ்கின்ற மக்கள், மற்றும், திருஅவையின் நலன்கருதி, அமேசான், நிரந்தர திருத்தூது கூட்டுப்பண்பு பரிசோதனைக்கூடமாக மாறவேண்டும் என வலியுறுத்தியதோடு, நம் பொதுவான இல்லத்தைப் பராமரிப்பதற்கு உதவுவதற்காக, பழங்குடிகள் மற்றும், அவர்களின் கலாச்சாரம் ஊக்குவிக்கப்பட வேண்டுமெனவும் மாமன்றத் தந்தையர் கூறினர்.

அமேசான் பகுதியில், அருள்பணியாளர்களைவிட பொதுநிலை திருத்தொண்டர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர் என்றும், அருள்பணியாளர்களை உருவாக்கும் பணியில் மேலும் கவனம் அவசியம் என்றும், பொதுநிலை விசுவாசிகளின் பொறுப்புணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும், மாமன்றத் தந்தையர் கூறினர்.

படைப்பின் இறையியல்

படைப்பின் இறையியல் பற்றியும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட மாமன்றத் தந்தையர், இறையியலுக்கும், படைப்புக்கும் இடையே, உரையாடல் இடம்பெறுவது இன்றியமையாதது என்பதையும் வலியுறுத்தினர்.

திருஅவையில் பெண்களின் பங்கு, பல்சமய மற்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல், அமேசான் பற்றி உலக அளவில் ஒவ்வொருவரின் அக்கறை போன்றவை பற்றிய கருத்துப் பகிர்வுகளும், அமேசான் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஆறாவது பொது அமர்வில் இடம்பெற்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2019, 14:58