தேடுதல்

அமேசான் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம் அமேசான் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம் 

அமேசான்: திருஅவை சூழலியல் பாவங்களை அறிக்கையிடுகின்றது

பூர்வீக மக்கள் மத்தியில் நிரந்தர திருத்தொண்டர்கள் திருப்பொழிவு செய்யப்பட வேண்டும், திருத்தூதுப் பணிகளில் பூர்வீக மக்கள் அதிகம் இணைக்கப்பட வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமேசான் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தின் நான்காவது பொது அமர்வு, அக்டோபர் 08, இச்செவ்வாய் மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில் 182 மாமன்றத்தந்தையருடன் நடைபெற்றது.

அமேசானில் வாழ்கின்ற பூர்வீக மக்களின் உரிமைகள் திட்டமிட்டு மீறப்படுவது, அப்பகுதியில் வாழ்கின்ற மனிதரும், பல்லுயிர்களும் காயப்படுத்தப்பட்டு வருவது அப்பகுதியின் வாழ்வு முழுவதற்குமே அச்சுறுத்தலாக உள்ளது ஆகியவை பற்றிய கருத்துக்கள், நான்காவது பொது அமர்வில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

அமேசான் பகுதியின் வாழ்வுமுறை எப்போதும் பாதுகாக்கப்படவும், அப்பகுதியில் அச்சுறுத்தப்பட்டுவரும், மரணத்தின் பல அமைப்புமுறைகளுக்கு எதிராய்க் கண்டனம் தெரிவிக்க வேண்டுமெனவும், திருஅவை, தனது நன்னெறி மற்றும் ஆன்மீக அதிகாரத்தோடு தீவிரமாய்ச் செயல்பட வேண்டுமெனவும், மாமன்றத் தந்தையர் கேட்டுக்கொண்டனர்.

அப்பகுதியின் எதார்த்த நிலவரத்தை, பார்வையாளர்களாக நம்மை நோக்க வைக்கும், தனிமனிதப்போக்கு மற்றும், புறக்கணிப்பு நடவடிக்கை எதிர்க்கப்பட வேண்டும், மனித மாண்பிற்கு முன்னுரிமையளிக்கும், ஒருங்கிணைந்த சூழலியல் மற்றும், கடமையுணர்வை மையப்படுத்தும், ‘சூழலியல் மனமாற்றம்’ ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும், மாமன்றத் தந்தையர் அழைப்பு விடுத்தனர்.

மனித உரிமை மீறல்களை எதிர்க்க...

அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தும்போது பல நேரங்களில் கண்டுகொள்ளாமல் இருக்கும் உலகளாவிய சமுதாயம், அமேசான் பகுதி முழுவதிலும் சுற்றுச்சூழல் கடுமையாய்ப் பாதிக்கப்படுவதை, மிக கவனமுடன் கருத்தில்கொண்டு செயல்படுமாறு வலியுறுத்திய மாமன்றத் தந்தையர், இயற்கை வளங்களின் பாதுகாவலர்களாகிய பூர்வீக இன மக்கள், காலநிலை மாற்றத்திற்கெதிரான போராட்டத்தில் இணைக்கப்பட வேண்டுமெனவும் பரிந்துரைத்தனர்.

நீடித்த நிலையான வளர்ச்சி பற்றி பல்வேறு உரைகளும், விண்ணப்பங்களும் இடம்பெற்று வருகின்றன, இவை சமுதாய அளவில் நீதியானது மற்றும், இணைக்கப்பட வேண்டியவை, அதேநேரம், வருங்கால அமேசான், ஓர் அருங்காட்சியகமல்ல, மாறாக, அது நம் கரங்களில் இருப்பதால், அது குறித்த அக்கறை தேவை எனவும் கூறப்பட்டது.

சூழலியல் மனமாற்றம்

சூழலியல் மனமாற்றத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்திய மாமன்றத் தந்தையர், சுற்றுச்சூழலுக்கு எதிராக இழைக்கப்படும் பாவங்களின் தன்மை, கடவுளுக்கும், நம் அயலவருக்கும், வருங்காலத் தலைமுறைகளுக்கும் எதிராக ஆற்றப்படும் பாவம் என்று நோக்குவதற்கு, சூழலியல் மனமாற்றம், மக்களை இட்டுச்செல்ல வேண்டும் எனவும் கூறினர்.

பாரம்பரியப் பாவங்களுடன் சூழலியல் பாவங்களையும் இணைப்பதற்கு இறையியல் இலக்கியம் ஆவன செய்ய வேண்டிய அவசியத்தையும், சூழலியல் மனமாற்றம் வலியுறுத்துகின்றது எனவும், மாமன்றத் தந்தையர் கூறினர்.

பூர்வீக மக்களுக்கு, நற்செய்திப்பணியாற்றுவது குறித்த பகிர்வுகளில், அம்மக்கள் மத்தியில் நிரந்தர திருத்தொண்டர்கள் திருப்பொழிவு செய்யப்பட வேண்டும், திருத்தூதுப் பணிகளில் பூர்வீக மக்கள் அதிகம் இணைக்கப்பட வேண்டும், திருஅவையின் வாழ்வில் பெண்களின் ஈடுபாடு அதிகம் ஊக்குவிக்கப்பட வேண்டும், இறையழைத்தல்களுக்காகச் செபிக்க வேண்டும் உள்ளிட்ட பல தலைப்புக்களில் கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

அமேசானில் கொல்லப்பட்டவர்கள்

அமேசானின் Mato Grossoவில் கொல்லப்பட்ட, இறைஊழியர் சலேசிய சபையின் அருள்பணி Rudolf Lunkenbein, பொதுநிலை விசுவாசி Simão Cristino Koge Kudugodu ஆகிய இருவரும் இம்மாமன்றத்தில் நினைவுகூரப்பட்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2019, 15:29