அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு தயாரிப்பு அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு தயாரிப்பு 

மாமன்றம்-நற்செய்தி அறிவிப்பு மற்றும், பூமியைப் பராமரித்தல்

அமேசான் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தில் இடம்பெறும் விவாதத் தொகுப்பு, எண்பதாயிரம் பேரிடம் ஆலோசனைகள் கேட்டு தயாரிக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நற்செய்தி அறிவிப்பு மற்றும், நம் பொதுவான இல்லத்தைப் பராமரிக்க வேண்டிய தேவை அதாவது, மனித வாழ்வின் அனைத்து நிலைகளையும் பாதுகாத்தல் மற்றும், பல்வேறு உயிரினங்களைப் பராமரித்தல் என்பதே, அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் மையமாக அமையும் என்று, திருப்பீட அதிகாரிகள் அறிவித்தனர்.

"அமேசான் பகுதி: திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சூழலியலுக்கும் புதிய பாதைகள்" என்ற தலைப்பில், வத்திக்கானில் அக்டோபர் 6ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடைபெறும் அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம் குறித்த செய்தியாளர்கள் கூட்டத்தில், திருப்பீட அதிகாரிகள் இவ்வாறு கூறினர்.

இந்த ஆயர்கள் மாமன்றத்தின் பொதுத் தொடர்பாளராகிய, பிரேசிலின் சா பவ்லோ முன்னாள் பேராயர், கர்தினால் Claudio Hummes அவர்கள் விளக்குகையில், சூழலியல் பாதுகாப்பின் அவசரத் தேவைகள், பூர்வீக இன மக்கள் மற்றும், காடுகள் பற்றிய தலைப்புக்களிலும், கலந்துரையாடல்கள் நடைபெறும் எனவும் கூறினார்.  

இம்மாமன்றம், ஓர் உண்மையான சூழலியல் அணுகுமுறையைக் கொண்டிருக்கும், இந்த அணுகுமுறை, எப்போதும், ஒரு சமுதாய அணுகுமுறையாகவும் மாறும் என்றும், சூழலியல் குறித்த உரையில், நீதியும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும், கர்தினால் Hummes அவர்கள் தெரிவித்தார்.

கர்தினால் பால்திசேரி

மேலும், அக்டோபர் 3, இவ்வியாழனன்று நடைபெற்ற இச்செய்தியாளர் கூட்டத்தில் விளக்கிய, உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திசேரி அவர்கள், மாமன்றத்தில் இடம்பெறும் விவாதத் தொகுப்பு, பாப்பிறை ஏடு அல்ல, மாறாக, 170 ஆயர் பேரவைகள் மற்றும், ஏனைய அமைப்புகளிடமிருந்து வந்த பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தொகுப்பு என்று கூறினார். எண்பதாயிரம் பேரிடம் ஆலோசனைகள் கேட்டு இந்த தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது எனவும், அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தில், 184 மாமன்றத் தந்தையர் கலந்துகொள்வார்கள் எனவும், கர்தினால் பால்திசேரி அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2019, 15:42