தேடுதல்

அமேசான் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தின் செய்தியாளர் சந்திப்பு அமேசான் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தின் செய்தியாளர் சந்திப்பு 

அமேசான் மாமன்றம்: சிறு குழுக்களாக கலந்துரையாடல்

“திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சூழலியலுக்கும் புதிய பாதைகள்” என்ற தலைப்பில், அக்டோபர் 6ம் தேதி முதல் 27ம் தேதி வரை, அமேசான் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம் வத்திக்கானில் நடைபெறுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமேசான் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தின் பிரதிநிதிகள், அக்டோபர் 7, இத்திங்கள் முதல், இப்புதன் வரை பொது அமர்வுகளில் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டபின், அக்டோபர் 10, இவ்வியாழன் முதல், மொழி வாரியாக, சிறு குழுக்களாகப் பிரிந்து, கருத்துப் பரிமாற்றங்கள் செய்து வருகின்றனர்.

இந்த மாமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து, அக்டோபர் 10, இவ்வியாழனன்று செய்தியாளர் சந்திப்பை, திருப்பீட சமூகத்தொடர்பு அவைத் தலைவர் பவ்லோ ரூஃபினி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அச்சந்திப்பில் அறிவித்த, இந்த மாமன்றத்தின் சமூகத்தொடர்பு குழுவின் செயலர், இயேசு சபை அருள்பணி ஜாக்கோமோ கோஸ்தா அவர்கள், இதன் பொது அமர்வு மீண்டும் அக்டோபர் 12 இச்சனிக்கிழமையன்று துவங்கும், அதில் சிறு குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.

அமேசான் பகுதி பற்றி ஆய்வு செய்கின்றவேளை, அமேசானின் தற்போதைய நிலவரங்களின் தாக்கங்கள், உலகெங்கும் பணியாற்றுகின்ற திருஅவையைப் பாதிப்பதால், இந்த மாமன்றம் உலகளாவிய கூறைக் கொண்டிருக்கின்றது என்றும், அருள்பணி கோஸ்தா அவர்கள் தெரிவித்தார்.

ஆயர் Wilmar Santin

இந்த செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்துகொண்ட, பிரேசில் நாட்டின் Itaituba ஆயர் Wilmar Santin அவர்கள், தனது மறைமாவட்டம் அமேசான் பகுதியில் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கின்றது, அப்பகுதியில் திருஅவை, 1910 அல்லது 1911ம் ஆண்டிலிருந்தே பழங்குடி மக்களுக்குப் பணியாற்றி வருகின்றது என்று கூறினார்.

தனது மறைமாவட்ட பகுதியில், தூதூரைப் பணியாற்றும் கத்தோலிக்கருக்கும், பாப்பிஸ்ட் பிரிந்த கிறிஸ்தவ சபையினருக்கும் இடையே, 1963ம் ஆண்டு முதல் நல்லுறவுகள் நிலவி வருகிறது என்றும் உரைத்த ஆயர் Santin அவர்கள், தற்போது 48 தூதூரைப் பணியாளர்கள், பழங்குடி மக்களின் மொழியில் பணியாற்றி வருகின்றனர் என்று கூறினார்.

அருள்சகோதரி Echeverri

இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் பகுதி துறவிகள் அமைப்பின் தலைவர் அருள்சகோதரி Gloria Liliana Franco Echeverri அவர்கள் விளக்குகையில், ஏழைகள் மற்றும், புறக்கணிப்பட்டவர்களுடன் தோழமையுணர்வு கொண்டு செயல்படுவது புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த மாமன்றத்தில் ஏறத்தாழ நாற்பது பெண்கள் பங்கு கொள்கிறார்கள், திருஅவையில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும், அருள்சகோதரி Echeverri அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2019, 15:37