அமேசான் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்திற்குச் செல்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் அமேசான் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்திற்குச் செல்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் 

அமேசான்: சூழலியல் பாவங்கள், ஒருங்கிணைந்த மனமாற்றம்

ஒருங்கிணைந்த சூழலியல் மனமாற்றம் என்பது, தூக்கியெறியும் கலாச்சாரத்தைக் கைவிட்டு, வாழும்நிலையை மாற்றுவதாகும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமேசான் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தின் நிகழ்வுகள் பற்றி, அக்டோபர் 11, இவ்வெள்ளியன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இம்மாமன்றப் பிரதிநிதிகள் சிலர் தங்கள் சாட்சியங்களைப் பகிர்ந்துகொண்டனர் மற்றும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தனர்.

இச்சந்திப்பில் முதலில் பேசிய, மெக்சிகோ நாட்டு மெக்சிகோ நகர் பேராயரான, கர்தினால் Carlos Aguiar Retes அவர்கள், காலநிலை மாற்றம் ஏழைகளின் அழுகுரலை உரக்க அறிவித்துள்ளது, எனவே திருஅவையில் ஒருங்கிணைந்த சூழலியல் மனமாற்றம் அவசியம் என்று கூறினார்.

ஒருங்கிணைந்த சூழலியல் மனமாற்றம் என்பது, தூக்கியெறியும் கலாச்சாரத்தைக் கைவிட்டு, வாழும்நிலையை மாற்றுவதாகும் என்று விளக்கிய கர்தினால் Aguiar Retes அவர்கள், காலநிலை மாற்றத்தால் இப்பூமியில் மிக வறியோரே அதிகம் பாதிக்கப்படுவதால், இது குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகின்றது என்று தெரிவித்தார்.

தண்ணீர் மாசடைதல்

பிரேசில் நாட்டின் Palmas பேராயர் Pedro Brito Guimarâes அவர்கள் பேசுகையில், தனது மறைமாவட்டம், அந்நாட்டின் மையத்திலுள்ள மிக இளமையான மாநிலத்தில் உள்ளது எனவும், இங்கு 90 இலட்சம் வீட்டு விலங்குகளும், 15 இலட்சம் மக்களும் வாழ்கின்றனர் எனவும், மாமிசம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், இங்கு மனிதர்களைவிட விலங்குகள் நன்றாக வாழ்கின்றன எனவும் கூறினார்.     

இந்த விலங்குகளுக்குத் தேவைப்படும் சோயாபீன்ஸ் பயிர்த்தொழில் அளவுக்கதிகமாகப் பயிர்செய்யப்படுவதால், அது இப்பூமியில் எதிர்மறை தாக்கத்தை விளைவிக்கின்றது, மேலும், இப்பயிர்களுக்குத் தெளிக்கப்படும், பூச்சிக்கொல்லிகளும் வேதியப்பொருள்களும் ஆற்றை மாசடையச் செய்கின்றன என்றுரைத்த பேராயர், சூழலியல் பாவங்கள் பற்றியும் விளக்கினார்.

மறைசாட்சிகளின் நிலம்

இன்னும், பிரேசில் நாட்டின் Rio Branco ஆயர் Joaquín Pertíñez Fernández அவர்கள் பேசுகையில், முதலில் அமேசான் பகுதியின் வரலாற்றை விளக்கினார். உள்ளூர் கலாச்சாரம், கற்களைவிட மரங்களைச் சார்ந்தே உள்ளன, ஒவ்வொரு மரத்திற்கு அடியிலும் யாராவது ஒரு மறைசாட்சி புதைக்கப்பட்டுள்ளார், இது மறைசாட்சிகளின் நிலம் என்று குறிப்பிட்டார்.

மருத்துவ தூதுரைப்பணி சபையின் அருள்சகோதரி Birgit Weiler அவர்கள் பேசுகையில், இப்பூமியைத் தவறாக நடத்தும்போது, நம்மையே நாம் அவ்வாறு நடத்துகிறோம், திருஅவையின் எல்லா நிலைகளிலும், ஒருங்கிணைந்த சூழலியல் மனமாற்றம் அவசியம் என்று கூறினார்.

நெகிழிப்பொருள்கள் பயன்பாட்டை முழுமையாய் ஒதுக்குவது குறித்து குறிப்பிட்ட அச்சகோதரி, பூர்வீக இன மக்கள் சார்பாக, குறிப்பாக, அவர்களின் உரிமைகள் மீறப்படும்போது அவர்களுக்குச் சார்பாகப் பேச வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அக்டோபர் 7, இத்திங்களன்று துவங்கியுள்ள அமேசான் மாமன்றம், அக்டோபர் 27ம் தேதி, திருத்தந்தையின் திருப்பலியோடு நிறைவடையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2019, 15:26