அமேசான் சிறப்பு மாமன்றம் அமேசான் சிறப்பு மாமன்றம்  

அமேசானியாவின் நலவாழ்வை காப்பதில் அறிவியலின் பங்கு

தற்போதைய அறிவியல் சாதனைகள், அமேசானியா பகுதியில் நலவாழ்வைக் காப்பதற்கு, தீர்வுகளையும், அப்பகுதி மக்களின் வாழ்வுத்தரத்தை சிறப்பானதாக்கும் வழிவகைகளையும் வழங்க முடியும் - Carlos Alfonso Nobre

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 10, இவ்வியாழனன்று, அமேசான் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தின் பிரதிநிதிகள், சிறு குழுக்களில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்தனர்.

பிரேசில் நாட்டின் Itaituba ஆயர் Wilmar Santin, கொலம்பிய நாட்டின் Mitú அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Medardo de Jesús Henao Del Río, இலத்தீன் அமெரிக்க துறவு சபைகள் கூட்டமைப்பின் தலைவர், கொலம்பியாவின் அருள்சகோதரி Gloria Liliana Franco Echeverri, திருப்பீட சமூகத்தொடர்பு அவையின் தலைவர் Paolo Ruffini, தகவல் தொடர்பு குழுவின் செயலர், இயேசு சபை அருள்பணி Giacomo Costa ஆகியோர், இவ்வியாழன் நிகழ்வுகள் பற்றி, செய்தியாளர் சந்திப்பில் விளக்கினர்.

Carlos Alfonso Nobre

மேலும், அமேசான் சிறப்பு மாமன்றம் பற்றி, இப்புதனன்று செய்தியாளர் சந்திப்பில் விளக்கிய, 2007ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற, பிரேசில் நாட்டு காலநிலை அறிவியலாளர் Carlos Alfonso Nobre அவர்கள்,  அமேசான் பற்றிய கலந்துரையாடல்களில், அறிவியலின் பங்கு குறித்து விளக்கினார்.

தற்போதைய அறிவியல் சாதனைகள், அமேசானியா பகுதியில் நலவாழ்வைக் காப்பதற்கு, தீர்வுகளையும், அப்பகுதி மக்களின் வாழ்வுத்தரத்தை சிறப்பானதாக்கவும், வழிவகைகளை வழங்க முடியும் என்று, Alfonso Nobre அவர்கள் கூறினார்.

Ima Célia Guimarães Vieira

பிரேசில் நாட்டு தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவையின் உறுப்பினர் Ima Célia Guimarães Vieira அவர்கள் விளக்குகையில், அமேசான் பகுதியில் பல்லுயிர்கள் அழிந்து வருவது குறித்து கவலை தெரிவித்ததோடு, அம்மண்ணின் பூர்வீக இன மக்கள், உலகின் ஏனையப் பகுதிகளோடு மிகக் குறைவாகவே தொடர்பு கொண்டுள்ளனர் மற்றும், அவர்கள் தனித்துவிடப்பட்டுள்ளது பற்றி விளக்கினார்.

ஆயர் Erwin Kräutler

மேலும், அமேசான் பகுதியில் நகரங்களில் வாழ்வோர்க்குரிய மேய்ப்புப்பணி, இம்மாமன்றத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது என்று கேட்ட செய்தியாளர்க்குப் பதிலளித்த பிரேசில் ஆயர் Erwin Kräutler அவர்கள், அமேசான் பகுதியின் ஏறத்தாழ 80 விழுக்காட்டினர் நகரங்களில் வாழ்கின்றனர், கிராமங்களில் அல்லது நகரங்களில் வாழ்கின்ற எல்லாருக்கும், திருஅவை மேய்ப்புப்பணியில் அக்கறை காட்டுகின்றது என்று கூறினார்.

திருமணமான ஆண்களுக்கு, குருத்துவ திருப்பொழிவு வழங்கப்படுவது குறித்த விவகாரத்திற்குப் பதிலளித்த ஆயர் Kräutler அவர்கள், இக்காலத்தில் திருஅவைக்கு இதைத் தவிர, வேறு எந்த தெரிவும் கிடையாது, பூர்வீக இன மக்கள், கற்பு பற்றி புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று கூறினார். திருஅவையில் பெண்களின் பங்கு ஊக்குவிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்ட ஆயர் Kräutler அவர்கள்,, பெண்களைத் திருத்தொண்டர்களாக ஆக்குவது போன்ற விவகாரங்களுக்கு, தெளிவான தீர்வுகள் தேவைப்படுகின்றன என்றும் தெரிவித்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2019, 14:52