தேடுதல்

Vatican News
அமேசான் மாமன்றம் அமேசான் மாமன்றம்  (Vatican Media)

கடந்தகால அநீதிகளுக்காக, பழங்குடிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

பிலிப்பீன்சின் Victoria Tauli-Corpuz: அமேசான் மாமன்றம், பூர்வீக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும், அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்படுவதை நிறுத்தும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 08, இச்செவ்வாய் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில் நடைபெற்ற, அமேசான் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் மூன்றாவது பொது அமர்வு பற்றி செய்தியாளர் சந்திப்பில் முதலில் பகிரந்துகொண்ட பெரு நாட்டின், Huancayo பேராயரான இயேசு சபை கர்தினால் Pedro Ricardo Barreto Jimeno அவர்கள், அமேசான் பகுதியில் திருஅவையின் ஈடுபாடு பற்றிய தன் எண்ணங்களைத் தெரிவித்தார்.

கர்தினால் Pedro Barreto

REPAM எனப்படும், அமேசான் மக்களின் உரிமைகளையும் மாண்பையும் ஊக்குவிக்கும் திருஅவை அமைப்பின் துணைத் தலைவரான கர்தினால் Pedro Barreto அவர்கள் பேசுகையில், திருஅவை, நூற்றாண்டுகளாக, அமேசான் மக்களின் துன்பங்களில் தோழமையுணர்வு கொண்டிருக்கின்றது, அதேநேரம், கடந்தகாலத்தில் திருஅவை இழைத்த அநீதிகளை ஏற்று, அவற்றிற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் கூறினார்.

அமேசானில் ஒரே மொழி, அதாவது, ஒன்றிணைந்து செயல்படுகின்ற, எளிமையான மற்றும், தாழ்மையான வாழ்வுக்குச் சான்று பகரும், அன்பின் மொழி இடம்பெற வேண்டும் எனவும், கர்தினால் Pedro Barreto அவர்கள் கேட்டுக்கொண்டார்.

பூர்வீக இன மக்கள் மத்தியில் குழந்தைகளைக் கொலை செய்யும் பழக்கத்தை ஒருபோதும் கேட்டதில்லை, இவ்வாறு கூறுபவர்கள் அதனை நிரூபிக்க வேண்டும் என்றுரைத்த கர்தினால் Pedro Barreto அவர்கள், அம்மக்களின் மூதாதையரின் ஞானத்தை மதிக்கும் அதேவேளை, வாழ்வுக் கலாச்சாரம், நற்செய்திக்கு இன்றியமையாதது என்பதால், வாழ்வைப் பாதுகாக்குமாறு இயேசு அழைக்கிறார் என்று தெரிவித்தார். 

Moema Maria Marques de Miranda

திருத்தூதுப் பணியாற்றும், பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையைச் சார்ந்த, பொதுநிலையினரான, Moema Maria Marques de Miranda அவர்கள் பேசுகையில், நாங்கள், இந்த உலகின் இறுதியின் வாய்ப்பை அனுபவிக்கும் முதல் தலைமுறை என்றும், அண்மை சில பத்தாண்டுகளாகத்தான் உலகம் ஒன்றோடொன்று தொடர்புள்ளதை நாம் அங்கீகரித்துள்ளோம், படைப்போடு நல்லிணக்கத்துடன் வாழ்வது எப்படி என்பதை பூர்வீக இன மக்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும், கற்றுக்கொள்ள முடியும் என்றும், திருத்தந்தையிடம் கூறினார். 

அமேசானில் அரசியல் சார்ந்த விவகாரங்களில் திருஅவையின் ஈடுபாடு பற்றிய செய்தியாளர் கேள்விக்கும் பதிலளித்த, Marques de Miranda அவர்கள், பொருளாதாரத்திற்கும், சூழலியலுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றி விளக்கி, இந்த உலகை வாழ்வதற்கேற்ற இல்லமாக அமைப்பதில், இந்த உலகம் எவ்வாறு செயல்படுகின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஐ.நா. அதிகாரி Tauli-Corpuz

அமேசான் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கெடுக்கும், பூர்வீக இன மக்களின் உரிமைகள் குறித்து, ஐ.நா. நிறுவனத்திற்கு சிறப்பு அறிக்கையை வழங்கும், ஐ.நா. அதிகாரி Victoria Lucia Tauli-Corpuz அவர்கள், செய்தியாளர்களிடம் பேசுகையில், பூர்வீக இன மக்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் குறித்து குறிப்பிட்டார்.

பூர்வீக இன மக்கள், உலகளாவிய சமுதாயத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய Tauli-Corpuz அவர்கள், இந்த மாமன்றம், அம்மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும், அமேசான் பகுதி அழிக்கப்படுவதை நிறுத்தும் என தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

09 October 2019, 15:39