தேடுதல்

பிரேசில் நாட்டின் Waldorf பள்ளிகள் பிரேசில் நாட்டின் Waldorf பள்ளிகள் 

உலக அறிவுசார் சொத்து குறித்த ஐ.நா. கூட்டத்தில் திருப்பீடம்

நிலையான வளர்ச்சியையும், சமுதாய கட்டமைப்பையும் கொண்டிருப்பதற்கு, நாடுகளிடையே ஒருமைப்பாட்டுடன்கூடிய வளர்சசி, அறிவுசார்ந்தவைகளில் பகிர்வு, தொழில்நுட்ப உதவி போன்றவை இன்றியமையாதவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

உலகில் பொருளாதார வளர்ச்சியும் பொருட்களின் உற்பத்தியும் குறைந்து வருகின்ற போதிலும், உலகின் பல நாடுகளில் பொருளாதார மற்றும் தொழிற்துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்கள் அதிக அளவில் இடம்பெற்று வருகின்றன என்றார் பேராயர் இவான் யுர்கோவிச்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு திருப்பீடத்தின் பிரதிநிதியாகச் செயலாற்றும் பேராயர் யுர்கோவிச் அவர்கள், உலக அறிவுசார் சொத்து குறித்த ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றியபோது, இவ்வாறு கூறினார்.

பொருளாதார மற்றும், சமுதாய வளர்ச்சியை அடைவதற்கான புதிய கண்டுபிடிப்புக்களை அனைத்து விதமான பொருளாதாரமும் ஊக்குவிப்பதைக் காண்கிறோம் என்ற பேராயர், தொழில்நுட்ப சக்தி என்பது, எப்போதும் நிதி மற்றும், பொருளாதார மேலாண்மையோடு தொடர்புடையதாக உள்ளது என்ற வருத்தத்தையும் வெளியிட்டார்.

தொழில்நுட்ப வளர்சசி என்பது, மனிதகுல பொறுப்புணர்வு மற்றும் மதிப்பீட்டுக்களின் வளர்ச்சியோடு ஒத்திணங்கிச் செல்வதாக இல்லை எனவும் எடுத்துரைத்த பேராயர் யுர்கோவிச் அவர்கள், இக்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் மேலாண்மை, அனைத்தையும் தன் காட்டுப்பாட்டின்கீழ் கொண்டு செயல்படுவதாகத் தெரிகின்றது என்றார்.

சரிநிகரற்ற தன்மைகளுக்கு காரணமாகும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை உண்மையில் வளர்ச்சி என்று கூற முடியாது எனவும் கூறினார் பேராயர்.

தொழில்நுட்ப வளர்சசிகள் என்பவை, பொது நலனுக்கு எதிரியாக செயல்படாமல், ஏழ்மை இடைவெளியைக் குறைக்கவும், நலத்தேவைகள், கல்வி, மகிழ்வு, நிலையானத்தன்மை போன்றவைகளை முன்னேற்றவும் உதவ வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த பேராயர் யுர்கோவிச் அவர்கள், மக்களின் பொது நலனுக்குச் சேவையாற்ற, மனித பொறுப்புணர்வுகளுடன் இணைந்த புதிய கண்டுபிடிப்புக்கள் தேவை என்று கூறினார்.

நிலையான வளர்ச்சியையும், சமுதாய கட்டமைப்பையும் கொண்டிருப்பதற்கு, நாடுகளிடையே ஒருமைப்பாட்டுடன்கூடிய வளர்சசி, அறிவுசார்ந்தவைகளில் பகிர்வு, தொழில்நுட்ப உதவி போன்றவை இன்றியமையாதவை என்ற பேராயர், தொழில்நுட்ப வளர்ச்சி என்பது, பொதுநலக் கண்ணோட்டம், விடுதலை நன்னெறி, பொறுப்புணர்வு, சகோதரத்துவம், இயற்கை மீதான அக்கறை போன்றவைகளினால் தூண்டப்பட்டதாக, அவைகளோடு இணங்கிச் செல்வதாக இருக்க வேண்டும் என மேலும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2019, 16:02