தேடுதல்

Vatican News
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின்  பொது அவை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை  (AFP or licensors)

குழந்தை வளர்ப்பில், பெற்றோரின் முக்கிய கடமை

ஐ.நா.வில், குற்றத் தடுப்பு, போதைப்பொருள் கட்டுப்பாடு, சிறாரின் உரிமைகளை ஊக்குவித்து பாதுகாத்தல், பெண்களின் முன்னேற்றம் ஆகிய தலைப்புகளில் உரையாற்றியனார், பேராயர் அவுசா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்றுவரும் பொது அவையின் 74வது அமர்வில், குற்றத் தடுப்பு மற்றும், குற்றவாளிகளுக்கு நீதி வழங்கும் முறை, உலக அளவில் போதைப்பொருள் கட்டுப்பாடு, சிறாரின் உரிமைகளை ஊக்குவித்து பாதுகாத்தல், பெண்களின் முன்னேற்றம் ஆகிய தலைப்புகளில், திருப்பீடத்தின் சார்பில் கருத்துக்களை எடுத்துரைத்தார், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா.

ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இந்த 74வது அமர்வில் சிறார் பற்றி உரையாற்றுகையில், குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோரின் முக்கிய கடமையை வலியுறுத்தினார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் உலகத் தலைவர்கள் அங்கீகரித்த சிறார் உரிமைகள் பற்றிய உலகளாவிய ஒப்பந்தம், இன்று வரலாற்றில் மிக அதிகமாக நடைமுறைப்படுத்தப்படும் மனித உரிமைகள் குறித்த ஒப்பந்தம் என்றும், பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

மேலும், குற்றத் தடுப்பு மற்றும், குற்றவாளிகளுக்கு நீதி வழங்கும் நடவடிக்கைகள், உலகளாவிய மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமென்று திருப்பீடம் வலியுறுத்துவதாக உரைத்த பேராயர் அவுசா அவர்கள், குற்றத் தடுப்பு மற்றும், குற்றவாளிகளுக்கு எதிராய்க் கையாளும் நடவடிக்கையில், உலகளாவிய சமுதாயம், அடிப்படை மனித உரிமைகளை மதித்து பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மனித வர்த்தகம், மனித சமுதாயத்திற்கெதிரான குற்றம், இது புற்றுநோயாக பரவி, உலகில் கொடூரமான வடுவை ஏற்படுத்தி உள்ளது, இதனைத் தடுப்பதற்கு, அரசுகளும், அமைப்புகளும், தனிநபர்களும், மேலும் அதிகமாகத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் பேராயர் அவுசா அவர்கள் அழைப்பு விடுத்தார்.

11 October 2019, 15:35