தேடுதல்

பெலாருஸ் அணு மின்நிலையம் பெலாருஸ் அணு மின்நிலையம் 

அணு ஆயுதக் களைவு, உலகின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் நடைபெற..

உலகில் அணு ஆயுதங்கள் ஒழிப்பிற்கு ஆதரவாக பல ஆண்டுகளாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு இணக்கமான சூழல் இன்னும் எட்டப்படவில்லை என்பது கவலையாக உள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அணு ஆயுதங்கள் மேலும் பரவாமல் இருப்பதற்கும், அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கும் அவசியமான, அணு பரிசோதனை தடை புரிந்துணர்வு ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதற்கு, அதற்குப் பொறுப்பான அனைத்து அரசுகளும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, திருப்பீடம் கேட்டுக்கொண்டுள்ளது.  

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், அக்டோபர் 18, இவ்வெள்ளியன்று, முழுமையான ஆயுதக் களைவு குறித்து, ஐ.நா. பொது அவையின் 74வது அமர்வில் உரையாற்றுகையில், இவ்விவகாரத்தில் திருப்பீடத்தின்  நிலைப்பாட்டை உறுதி செய்தார்.

போர்த்தளவாடங்கள், நீர்மூழ்கி போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் போன்ற, எவையாக இருந்தாலும், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள், அவற்றை  நவீனப்படுத்தும் அனைத்து திட்டங்களையும் மறுபரிசீலனை செய்யுமாறும் திருப்பீடம் வலியுறுத்துவதாக, பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

அணு ஆயுத ஒழிப்பு குறித்து, 2017ம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெற்ற உலகளாவிய கருத்தரங்கில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையாற்றியதைச் சுட்டிக்காட்டிய பேராயர் அவுசா அவர்கள், அணு ஆயுதங்களை வைத்திருப்பது மற்றும், அவற்றைப் பயன்படுத்துவது, போரிடும் குழுக்களுக்கு மட்டுமல்லாமல், முழு மனித சமுதாயத்திற்கே அச்சுறுத்தல் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2019, 14:59