விசுவாசக் கோட்பாட்டு பேராய முன்னாள் தலைவர், கர்தினால் வில்லியம் ஜோசப் லெவாதா விசுவாசக் கோட்பாட்டு பேராய முன்னாள் தலைவர், கர்தினால் வில்லியம் ஜோசப் லெவாதா 

அமெரிக்க கர்தினால் Levada மரணம், திருத்தந்தை இரங்கல்

2005ம் ஆண்டில் திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாட்டு பேராயத் தலைவராக நியமிக்கப்பட்ட, மறைந்த கர்தினால் Levada அவர்கள், 2006ம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாட்டு பேராய முன்னாள் தலைவரான, அமெரிக்க ஐக்கிய நாட்டு கர்தினால் வில்லியம் ஜோசப் லெவாதா அவர்கள், தனது 83வது வயதில், செப்டம்பர் 26, இவ்வியாழன் இரவில் உரோம் நகரில் இறைபதம் சேர்ந்தார்.

கர்தினால் Levada அவர்களின் மறைவையொட்டி, இரங்கல் செய்தி அனுப்பியுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இவர் திருஅவையின் தலைமைப் பீடத்திற்கும், தலத்திருஅவைக்கும் ஆற்றியுள்ள நற்பணிகளைப் பாராட்டியதோடு, அவரின் ஆன்மா இறைவனில் நிறைசாந்தியடைய, தனது செபங்களையும் தெரிவித்துள்ளார். 

லாஸ் ஆஞ்சலெஸ் நகரில் பிறந்த கர்தினால் Levada அவர்கள், 1983ம் ஆண்டில், லாஸ் ஆஞ்சலெஸ் மறைமாவட்டத்திற்குத் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். இவர், கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு தயாரிப்பில், 1980களில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். 

2005ம் ஆண்டில் திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாட்டு பேராயத் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 2006ம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

கர்தினால் Levada அவர்களின் அடக்கச்சடங்கு திருப்பலியை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், செப்டம்பர் 27, இவ்வெள்ளி நண்பகலில், கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே அவர்கள், தலைமையேற்று நிறைவேற்றினார். திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினாலின் உடலை மந்திரித்தார்.

கர்தினால் Levada அவர்களின் மறைவையொட்டி, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 212 ஆகவும், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய எண்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆகவும் மாறியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2019, 15:00