தேடுதல்

C9 கர்தினால்கள் அவை C9 கர்தினால்கள் அவை 

C9 அவையின் 32வது கூட்டம், டிசம்பர் 2,3,4

திருப்பீட தலைமையகச் சீர்திருத்தப் பணிகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கர்தினால்கள் அவையின் 31வது கூட்டம் இவ்வியாழனன்று நிறைவடைந்தது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

இவ்வியாழன் காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையை மையப்படுத்தி, ஹாஸ்டாக் (#SantaMarta) குடன், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"ஆயர்களாகிய நாமும், அருள்பணியாளர்களும், கடவுளின் அருள்கொடையை, ஒரு வேலையாக மாற்றினால், இயேசுவின் உற்றுநோக்குதலை இழந்துவிடுவோம், எனவே, நம் திருப்பணியின் அருள்கொடையை அக்கறையுடன் பராமரிப்பதற்கு ஆண்டவரின் உதவிக்காக மன்றாடுவோம் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில் இடம்பெற்றிருந்தன.

C9 அவையின் 31வது கூட்டம்

மேலும், செப்டம்பர் 17, இச்செவ்வாயன்று தொடங்கிய, C9 கர்தினால்கள் அவையின் 31வது கூட்டம், இவ்வியாழனன்று நிறைவடைந்தது. இதன் அடுத்த கூட்டம், வருகிற டிசம்பர் 2,3,4 ஆகிய நாள்களில் நடைபெறும்.

திருப்பீட தலைமையகச் சீர்திருத்தப் பணிகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் C9 அவையின் இக்கூட்டம் பற்றி அறிவித்த திருப்பீட தகவல் தொடர்பகம், 2020ம் ஆண்டு கூட்டங்களுக்கு தேதிகள் குறிக்கப்பட்டுள்ளன என்றும், ஆயர் பேரவைகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைக்கப்படும் புதிய திருத்தூது கொள்கை விளக்கத்தின் வரைவுத் தொகுப்பு பற்றி ஆய்வு செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. இக்கூட்ட அமர்வுகளில் திருத்தந்தை கலந்துகொண்டார் என்றும், திருப்பீட தகவல் தொடர்பகம் கூறியது.

மேலும், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கர்தினால்களைச் சந்தித்த, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்கள், ஆர்த்தடாக்ஸ் திருஅவையில் கூட்டுப்பண்பின் மதிப்பு பற்றி பகிர்ந்துகொண்டு, இந்த அவையினருக்காகத் தான் செபிப்பதாகக் கூறியுள்ளார்.

முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள், திருப்பீடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்குமுன், C9 கர்தினால்கள் அவையினரைச் சந்தித்து தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2019, 15:12