தேடுதல்

Vatican News
புனித குழந்தை தெரேசா புனித குழந்தை தெரேசா 

சிறப்பு தூதுரைப்பணி மாத முக்கிய திருவழிபாடுகள்

அக்டோபர் தூதுரைப்பணி மாதத்தைத் துவங்கி வைப்பதற்காக, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், அக்டோபர் 1, மாலை 6 மணிக்கு, திருப்புகழ்மாலை வழிபாட்டை திருத்தந்தை தலைமையேற்று நடத்துவார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிறப்பு தூதுரைப்பணி மாதமாகச் சிறப்பிக்கப்படும் வருகிற அக்டோபரில், வத்திக்கான்,  உரோம் மற்றும், உலகின் பல்வேறு தலத்திருஅவைகளில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

திருஅவையில் நற்செய்தி அறிவிப்பை உயிர்த்துடிப்புள்ளதாக்கும் நோக்கத்தில், 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி ஞாயிறு மூவேளை செப உரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த சிறப்பு தூதுரைப்பணி மாதம் பற்றி அறிவித்தார்.

“திருமுழுக்குப் பெற்றவர்கள் மற்றும், அழைப்புப் பெற்றவர்கள்: உலகின் தூதூரைப்பணியில் திருஅவை” என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படும், இந்த சிறப்பு மாதத்திற்கென, தலத்திருஅவைகளில் பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு, தயாரிப்புகளும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் தூதுரைப்பணி மாதத்தைத் துவங்கி வைப்பதற்காக, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், புனித குழந்தை தெரேசாவின் விழாவான அக்டோபர் 1, செவ்வாயன்று, மாலை 6 மணிக்கு, மாலை திருப்புகழ்மாலை வழிபாட்டை தலைமையேற்று நடத்துவார். அதற்குமுன், மாலை 5.15 மணிக்கு, உலகில் தூதுரைப்பணியாற்றுவோர் தங்கள் சாட்சியங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.

1925ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி குழந்தை தெரேசாவை புனிதர் என அறிவித்த திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், அதற்கு இரு ஆண்டுகளுக்குப்பின், புனித பிரான்சிஸ் சவேரியாருடன் இப்புனிதையையும் சேர்த்து, தூதுரைப்பணி நாடுகளுக்குப் பாதுகாவலர் என அறிவித்தார்.  

இரண்டாவது நிகழ்வு அக்டோபர் 7ம் தேதி மாலை 3 மணிக்கு, உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காவில், நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர், கர்தினால் பிஃலோனி அவர்கள், உலக அளவில் செபமாலையைத் துவங்கி வைப்பார்.

இறுதி நிகழ்வாக, அக்டோபர் 20, பொதுக்காலம் 28ம் ஞாயிறு, காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், தூதுரைப்பணி ஞாயிறு திருப்பலியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றுவார்.

20 September 2019, 15:50