அமேசான் காடுகள் அமேசான் காடுகள் 

அழிவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள மழைக்காடுகள்

புதுப்பிக்கத்தக்க வளமாகிய மழைக்காடுகள் குறித்து, இந்த நகர்மயமாக்கல் காலத்தில், குறைத்து மதிப்பிட்டப்படுகின்றது - கர்தினால் பரோலின்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் வானொலி

இவ்வுலகிற்கும், வருங்காலத் தலைமுறைக்கும், மனிதகுல ஒன்றிணைந்த வளர்ச்சிக்கும் இன்றியமையாத அங்கமாக இருக்கும் மழைக்காடுகள் காப்பாற்றப்பட வேண்டும் என ஐ.நா. நிறுவனக் கூட்டத்தில் அழைப்பு விடுத்தார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஐ.நா. நிறுவனத்தின் 74வது பொது அவைக்கூட்டத்தில், மழைக்காடுகளின் பாதுகாப்பு குறித்து உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், புதுப்பிக்கத்தக்க வளமாகிய மழைக்காடுகள் குறித்து, இந்த நகர்மயமாக்கல் காலத்தில், குறைத்து மதிப்பிட்டப்படுகின்றது என்று கவலையை வெளியிட்டார்.

காடுகள் என்பவை, நாம் பயன்படுத்தி அழிப்பதற்கு மட்டுமே உதவும் வளம் அல்ல, மாறாக, அவைகள் மீண்டும் மீண்டும் பயிரிடப்பட்டு நிரப்பப்பட வேண்டியவை என்பதை உணர்த்தும் நோக்கத்தில், எல்லாத் தலைமுறைகளுக்கும் கல்வியறிவு வழங்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார் திருப்பீடச் செயலர்.

காடுகளின் அழிவு என்பது, பல்வேறு உயிரின வகைகளின் அழிவிற்கும், இவ்வுலகின் மொத்த வாழ்வியல் அமைப்புமுறைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், அது குறித்த விழிப்புணர்வுக் கல்வி இன்றியமையாதது என்றார் கர்தினால் பரோலின்.

காடுகள் அழிவினால், காடுகளை நம்பியிருக்கும் மக்களின் உறைவிடங்கள், வாழ்வு, கலாச்சார பாரம்பரியம், மற்றும், சமூக அமைப்புமுறைகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன என்பதையும் நினைவூட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், காடுகளை நம்பி வாழ்வோரையும், நம் வருங்கால தலைமுறையையும் மனதில் கொண்டு மழைக்காடுகளைப் பாதுகாக்கும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

அமேசான் பற்றிய ஆயர்கள் மாமன்றம்

இன்னும் இரண்டு வாரங்களில், அதாவது, அக்டோபர் 6ம் தேதி, அமேசான் பகுதி பூர்வீக இன மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கும் உலக ஆயர்கள் மாமன்றம் வத்திக்கானில் இடம்பெற உள்ளது குறித்தும் எடுத்துரைத்த கர்தினால் அவர்கள், உலகின் ஏனைய பகுதிகளிலும் மழைக்காடுகள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்றார்.

இம்மாதத் துவக்கத்தில் மடகாஸ்கர் நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்குள்ள தலைவர்களை சந்தித்தபோது, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார், ஏனெனில், 2001ம் ஆண்டு முதல் அந்நாடு, தன் காடுகளில் 21 விழுக்காட்டை இழந்துள்ளது என்றார் கர்தினால் பரோலின்.

ஏழ்மை ஒழிப்பு, வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் போன்றவைகள் வழியாக சுற்றுசுசூழல் பாதுகாப்பிற்கு உதவமுடியும் என்பதையும், ஐ.நா. நிறுவனத்தில் வழங்கிய தன் உரையில் எடுத்தியம்பினார், திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2019, 14:49