தேடுதல்

Vatican News
சுரினாம்-பிரேசில் பூர்வீக இன மக்கள் சுரினாம்-பிரேசில் பூர்வீக இன மக்கள்  (ranuabhelakh@yahoo.com Suriname)

பூர்வீக இன மக்களின் மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டும்

இன்றைய உலகில் பேசப்பட்டுவரும் 6,809 பூர்வீக இன மொழிகளில், 90 விழுக்காட்டு மொழிகளை, ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்களே பேசுகின்றனர். எனவே ஏறத்தாழ 6,100 மொழிகள் அழியும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

பூர்வீக இன மக்களையும், அவர்களின் நிலங்களையும் பாதுகாப்பதற்கு, உலகினர் அனைவரும் தங்களை அர்ப்பணிப்பது, மனித உரிமைகளின் அடிப்படையான அறநெறி சார்ந்த கடமை என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. நிறுவன கூட்டமொன்றில் தெரிவித்தார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும், பன்னாட்டு அமைப்புகளில், திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றிவரும், பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் 42வது அமர்வில், பூர்வீக இன மக்கள் பற்றிய கருத்துப்பரிமாற்றத்தில் இப்புதனன்று இவ்வாறு உரையாற்றினார்.

2019ம் ஆண்டு, பூர்வீக இன மொழிகளின் ஆண்டு என கடைப்பிடிக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டி உரையாற்றிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், ஒரு நாட்டின் அரசியல், சமுதாய, பொருளாதார மற்றும், கலாச்சார உரிமைகளில், இந்த மக்களின் மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என, உலகளாவிய மனித உரிமைகள் சட்டம் கூறுகின்றது என்பதையும் நினைவுபடுத்தினார்.

ஐ.நா.வின் 2030ம் ஆண்டு நீடித்த நிலைத்த 17 வளர்ச்சித்திட்ட இலக்குகளை அமல்படுத்துவதில், பூர்வீக இன மக்களும் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய, பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், இம்மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது பற்றி,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்து வருவதையும் குறிப்பிட்டார்.

இம்மக்களின் கலாச்சார பாரம்பரியத்தில், அவர்களின் மொழிகள் முக்கியத்துவம் பெறுகின்றன, இவை, ஒரு நாட்டின் கலாச்சாரத் தனித்துவத்திற்குச் சுமையாக இருப்பதாக நோக்கப்படக் கூடாது என்று கூறிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், இவர்களின் மொழிகளைப் பாதுகாப்பது, மனித சமுதாயத்தில், நாட்டின் வளமையை உயர்த்திப் பிடிக்கின்றது என்று கூறினார்.

அமேசான் பகுதி போன்ற உலகின் பல்வேறு இடங்களில், பூர்வீக இன மக்களால் சில சமூகத்தொடர்பு மையங்கள் ஏற்கனவே நடத்தப்பட்டு வருகின்றன எனவும், அவர்கள், தங்களின் வார்த்தைகளையும், குரலையும் வெளியுலகுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர் என்றும் கூறினார்.

இன்றைய உலகில், ஏழாயிரத்திற்கு அதிகமான பூர்வீக இன மொழிகள் உள்ளன. இவற்றில் பல மொழிகள் பதிவுசெய்யப்படவில்லை. வட அமெரிக்காவில், 1600ம் ஆண்டிலிருந்து பூர்வீக இனத்தவரின் 52 மொழிகள் அழிந்துவிட்டன என்று சொல்லப்படுகின்றது.

19 September 2019, 15:19