துன்புறும் மக்களுக்கு ஆறுதல் கூறும் நிக்கரகுவா கர்தினால் Brenes துன்புறும் மக்களுக்கு ஆறுதல் கூறும் நிக்கரகுவா கர்தினால் Brenes 

நிக்கராகுவாவில், நியாயமான சுதந்திர தேர்தல்கள் அவசியம்

நிக்கராகுவா அரசியல் மற்றும், தொழில் அமைப்புகள், உண்மையை மதித்து, நீதியை மீண்டும் நிலைநாட்டி, பொது நலனை ஊக்குவிக்கும் விதத்தில், பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அவையின் 42வது அமர்வில், செப்டம்பர் 10, இச்செவ்வாயன்று, நிக்கராகுவா நாட்டின் நிலைமை பற்றிப் பேசினார், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அமைப்புகள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், நிக்கராகுவா நாட்டின் சமுதாய-அரசியல் சூழலை மிகுந்த அக்கறையோடு கவனித்து வருகின்ற திருப்பீடம், அந்நாட்டில் தீர்வுகாணப்படாத பிரச்சனைகளுக்கு, விரைவில் தீர்வுகள் காணப்படும் என நம்புகின்றது என்று கூறினார்.

இந்நடவடிக்கையில், அடிப்படை மனித உரிமைகளும், நாட்டின் அரசியலமைப்பில் குறிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளும், எப்பொழுதும் மதிக்கப்படும் என்ற திருப்பீடத்தின் நம்பிக்கையையும் எடுத்துரைத்தார், பேராயர் யுர்க்கோவிச்.

அமைதியும், வளமையும் கொண்ட நிலையான வருங்காலத்திற்கு அடித்தளம் அமைக்கப்படவும், நாட்டில் சமுதாய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவுமென, திருப்பீடம் சில கூறுகளை பரிந்துரைக்கின்றது என்றுரைத்த பேராயர், உண்மையை மதித்து, நீதியை மீண்டும் நிலைநாட்டி, பொது நலனை ஊக்குவிக்கும் விதத்தில், பல்வேறு அரசியல் மற்றும், சமுதாய தொழில் அமைப்புகள், ஒன்றிணைந்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுமாறு, திருப்பீடம் வலியுறுத்துகிறது என்று கூறினார்.

கடந்த மார்ச் மாதத்தில் கையெழுத்தான ஒப்பந்தங்களின்படி, பன்னாட்டு கண்காணிப்பாளர்களின் பிரசன்னத்தில், சுதந்திர மற்றும், ஒளிவுமறைவற்ற தேர்தல்கள் இடம்பெற வேண்டும் என்றும், பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், ஐ.நா. மனித உரிமைகள் அவை கூட்டத்தில் உரையாற்றினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2019, 14:42