தேடுதல்

Vatican News
பிரான்சின் அணு உலை அருகே உள்ள,  குளிர்படுத்தும் இரு கோபுரங்கள் பிரான்சின் அணு உலை அருகே உள்ள, குளிர்படுத்தும் இரு கோபுரங்கள் 

அணுப் பரிசோதனைகள் தடை ஒப்பந்தம் அமல்படுத்தப்பட..

வருங்காலத்தில் நடத்தப்படும் எந்தவித அணுப் பரிசோதனைகளும், இந்த உலகை அணு ஆயுதமற்ற இடமாக மாற்றுவதற்குரிய நம் இலக்கிலிருந்து மேலும் விலகச் செய்யும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அணுப் பரிசோதனைகள் தடை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (CTBT) நடைமுறைப்படுத்துவது தவிர்க்கமுடியாதது என்று சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள், அதனை அமல்படுத்துமாறு, திருப்பீடம்  வலியுறுத்தியுள்ளது.

அணுப் பரிசோதனைகளுக்கு எதிரான உலக நாளை நினைவுகூரும் விதமாக, செப்டம்பர் 9, இத்திங்களன்று நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற, ஐ.நா. பொது அவையின் உயர்மட்ட கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், அணுப் பரிசோதனைகளுக்கு எதிரான திருப்பீடத்தின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டினார்.

74 ஆண்டுகளுக்கு முன்னர், 1945ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியு மெக்சிகோவிலுள்ள பாலைநிலத்தில் நடத்தப்பட்ட முதல் அணு ஆயுதப் பரிசோதனைக்கு, “Trinity” என்று பெயரிட்டிருப்பது வருத்தத்துக்குரியது என்று கூறிய பேராயர் அவுசா அவர்கள், அந்நிகழ்வுக்குப்பின், நான்கு கண்டங்களிலும், பசிபிக் பெருங்கடல் பகுதியிலும் எட்டு நாடுகளால் இரண்டாயிரத்திற்கு அதிகமான அணுப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்பதையும் கவலையுடன் குறிப்பிட்டார்.

இந்த அணுப் பரிசோதனைக்கு முன்னரே, அணு சக்தி, வன்முறைக்குப் பயன்படுத்தப்படுவது தொடர்பாக, திருப்பீடம் தனது கவலையை வெளியிட்டது என்றும், அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதால், அவை ஏற்படுத்தியுள்ள துன்பங்கள் ஏற்கமுடியாதவைகளாக உள்ளன என்றும் கூறினார், பேராயர் அவுசா. வருங்காலத்தில் நடத்தப்படும் எந்தவித அணுப் பரிசோதனைகளும், இந்த உலகை அணு ஆயுதமற்ற இடமாக மாற்றுவதற்குரிய நம் இலக்கிலிருந்து மேலும் விலகச் செய்யும் மற்றும், கடும் எதிர்மறை விளைவுகளையும் கொணரும் எனவும், பேராயர் எச்சரித்தார்.

ஐ.நா.வால் உருவாக்கப்பட்ட, அணுப் பரிசோதனைகளுக்கு எதிரான உலக நாள், ஆகஸ்ட் 29ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது.

10 September 2019, 14:52