தேடுதல்

Vatican News
பேராயர் பெர்னார்தித்தோ அவுசா பேராயர் பெர்னார்தித்தோ அவுசா 

ஐ.நா.வில், காலநிலை பாதுகாப்பு முதல் உலக கூட்டம்

புவி மண்டலத்தில், பசுமைஇல்ல வாயு வெளியேற்றப்படுவது குறைக்கப்பட வேண்டும் என்பதில், திருப்பீடமும், கத்தோலிக்கத் திருஅவையும் மிகுந்த அக்கறையுடன் உள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மனித சமுதாயத்திற்கும், இயற்கைக்கும் பாதுகாப்பான ஒரு காலநிலையை அமைத்துக் கொடுக்க வேண்டியது, நம் அனைவரின் கடமை என்பதை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் வலியுறுத்தினார், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

செப்டம்பர் 17, இச்செவ்வாயன்று, நியு யார்க் நகரிலுள்ள ஐ.நா. நிறுவனத்தின் தலைமையகத்தில், காலநிலை பாதுகாப்பு பற்றி நடைபெற்ற, முதல் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய, ஐ.நா.வில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், காலநிலை பாதுகாப்பு, தொழில்நுட்பத்திற்கு பெரிய சவாலாக உள்ளது என்று தெரிவித்தார்.

செப்டம்பர் 23, வருகிற திங்களன்று நடைபெறும் காலநிலை பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்கும் ஐ.நா.வின் உலக உச்சி மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணொளிச் செய்தி அனுப்புவார் எனவும், இது, சூழலியலைப் பாதுகாப்பதில் திருத்தந்தை மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்பதை எடுத்துரைக்கின்றது எனவும் குறிப்பிட்டார், பேராயர் அவுசா.

புவி மண்டலத்தில், பசுமைஇல்ல வாயு வெளியேற்றப்படுவது குறைக்கப்பட வேண்டும் என்பதில், திருப்பீடமும், கத்தோலிக்கத் திருஅவையும் மிகுந்த ஆர்வமுடன் உள்ளன என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கத்தோலிக்கத் திருஅவைக்கு, அறநெறி மற்றும், மதம் சார்ந்த கூறு என்றும், பேராயர் அவுசா அவர்கள் தெரிவித்தார்.

நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை தெரிந்து வைத்திருக்கிறோம், இப்போது அதைச் செயலாற்ற வேண்டும், காலநிலை மாற்றப் பிரச்சனைக்கு, நம்மால் ஆற்றமுடிந்த எண்ணற்ற தீர்வுகள் உள்ளன என்று சொல்லி, தனது உரையை நிறைவு செய்தார், பேராயர் அவுசா.

18 September 2019, 17:04