தேடுதல்

Vatican News
ஐ.நா. நிறுவனத்தில் உலக அமைதி மணி ஐ.நா. நிறுவனத்தில் உலக அமைதி மணி  (AFP or licensors)

அமைதியைக் கொணரும் வழிகள் மனித இதயத்திலிருந்து..

பேராயர் அவுசா - அமைதி பற்றி மனித இதயங்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுவதை நாம் ஒருபோதும் நிறுத்தக் கூடாது

மேரி தெரேசா– வத்திக்கான்

அமைதியைக் கொணரும் வழிகள் அனைத்தும் மனித இதயத்திலிருந்து துவங்குகின்றது, நம் இதயங்களை அமைதி ஆட்சி செய்வதாக என்று, அமைதிக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நிகழ்வு ஒன்றில் கூறினார், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா.

நியு யார்க் இரட்டைக் கோபுரம், பயங்கரவாதத்தால் தாக்கப்பட்டதன் 18ம் ஆண்டு நிறைவையொட்டி, அந்நகரில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய, ஐ.நா. தலைமையகத்தில், திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் அவுசா அவர்கள், அமைதியின் அளவிடமுடியாத மதிப்பை வலியுறுத்துவதை நாம் ஒருபோதும் நிறுத்த இயலாது என்பதையே, இந்நிகழ்வு உணர்த்துகின்றது என்று கூறினார்.

தொடர் வன்முறையை நிறுத்தி, சட்ட ஒழுங்குமுறையைக் காத்து, அமைதிநிறை சமுதாயங்களை அமைப்பதற்கு வழிகள் உள்ளன என்றும், நம்மை நிர்வகிக்கவும், சட்டத்தை அமல்படுத்தவும் நிறுவனங்கள் உள்ளன என்றும் உரைத்த பேராயர் அவுசா அவர்கள், வன்முறையை நிறுத்துவதற்கு அவை ஒருபோதும் போதுமானதாக இல்லை என்று கூறினார்.

தற்போது வன்முறையின் அழிவுகளுக்கு எண்ணற்ற வழிகள் உள்ளன, அதிக சக்திமிகுந்த வன்முறைகள் கண்டுபிடிக்கப்பட்டும் வருகின்றன, அழிவையும், இறப்புக்களையுமே கொணரும் இவை பயனற்றவை மற்றும், கேலிக்குரியவை என்ற பேராயர், போரை வெறுத்து அமைதியை விரும்பும் இதயம் நமக்குத் தேவை என்று உரையாற்றினார்.

அமைதி பற்றிய திருத்தந்தையரின் உரைகளையும் மேற்கோள் காட்டிப் பேசிய, பேராயர் அவுசா அவர்கள், அமைதி பற்றி மனித இதயங்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுவதை நாம் ஒருபோதும் நிறுத்தக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

13 September 2019, 15:42