தேடுதல்

Vatican News
மக்காவோ ஆலயம் மக்காவோ ஆலயம்  ((c) 2011 - Salvador Manaois III)

ஆசியாவுக்கென, மக்காவோவில் புதிய குருத்துவ கல்லூரி

மக்காவோவிலுள்ள புதிய குருத்துவ கல்லூரியில், ஆசியாவின் மையப் பகுதியில் நற்செய்தி பணியாற்றுவதற்குச் செல்லும் அருள்பணியாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஆசியக் கண்டத்தின் மறைப்பணித்தளங்களில் பணியாற்றச் செல்லும் அருள்பணியாளர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கென, மக்காவோவின் சீனப் பகுதியில் புதிய குருத்துவ கல்லூரி ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

Neocatechumenal Way அதாவது, தொடக்ககால திருஅவை, புதிதாக திருமுழுக்குப் பெறுகின்றவர்களைத் தயாரித்த முறையில், அருள்பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் விதமாக, திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயம், இக்கல்லூரியை உருவாக்கியுள்ளது. இதன் நிர்வாகம், Redemptoris Mater குருத்துவ கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி, நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர், கர்தினால் பெர்னான்டோ பிலோனி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபிறகு, இந்த புதிய குருத்துவ கல்லூரிக்குரிய ஆவணத்தில் கையெழுத்திட்டு, அதை அவர் உருவாக்கினார்.  

இந்தப் புதிய குருத்துவ கல்லூரி, மக்காவோவில் அமைக்கப்பட்டுள்ளதற்கு காரணங்களையும் விளக்கியுள்ளது, நற்செய்தி அறிவிப்புப் பேராயம்.

முன்னாள் போர்த்துக்கீசிய காலனியாகிய மக்காவோ, 1999ம் ஆண்டு டிசம்பரில், சீனாவிடம் அளிக்கப்பட்டது. மத்தேயு ரிச்சி, புனித பிரான்சிஸ் சேவியர், அலெஸ்ஸாந்த்ரோ வலிஞ்ஞானோ போன்ற இயேசு சபை மறைப்பணியாளர்கள், சீனா அல்லது ஜப்பானில் நற்செய்தியை அறிவிக்கச் சென்றபோது, மக்காவோ வழியாகவே சென்றார்கள்.      

Neocatechumenal Way எனப்படும் கத்தோலிக்க இயக்கம், 1964ம் ஆண்டில், இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. அதில், தற்போது, உலகெங்கும், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான குழுக்களும், பத்து இலட்சம் உறுப்பினர்களும் உள்ளனர். நூற்றுக்கும் அதிகமான Redemptoris Mater குருத்துவ கல்லூரிகளும் உள்ளன. (UCAN)

07 August 2019, 16:12